வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் புகார்

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்ததாக ஜப்பான் கடற்படை மற்றும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜப்பான் கடற்படை கூறும் போது, “வடகொரியா கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கும் இடையே கிழக்கு கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி இன்று (31) பரிசோதனை நடத்தியுள்ளது. முதல் ஏவுகணைப் பரிசோதனை மாலை 4.35  மணிக்கும், இரண்டாவது ஏவுகணை சோதனை மாலை 4.38 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இவை குறுகிய தூர தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகள் என்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய இராணுவத் தரப்பும் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக  எதிர்த்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அது முதல் வடகொரியா-தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் – கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா – வடகொரியா இடையே அணுஆயுதச் சோதனை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.