மூன்று மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு

சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமென ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், சீருடை தரித்த அமெரிக்க இராணும் இலங்கைக்கு வருகை தந்து நடமாடும் நிலை வரலாம் என்றும், சோபா உடன்படிக்கை நாட்டிற்கு பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படமாட்டாது என கூறியிருக்கின்றார்.

அமெரிக்க இராணுவ முகாம் அமையும் என்ற ஊடகங்களின் போலியான அறிவிப்பினை மறுத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பயிற்சி மற்றும் அனர்த்த பதிலளிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கி செயற்படுவது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.