முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்குகிறார் கிழக்குத் தீமோரின் முன்னாள் அதிபர்

கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக்குத் தீமோர் சுதந்திர தேசத்தின் பிரதமராகவும் (2006-07) , அதிபராகவும் (2007-12) பொறுப்புக்களை வகித்தவர்.

உலகின் முக்கிய ஆளுமைகள் பங்கெடுத்துக் கொள்ளும் முள்ளிவாய்க்கால் பேருரை (Mullivaaikkaal Memorial Lecture) நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் மே18 நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்த்தி வருகின்றது. இம்முறை கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி நிகழ்வினை முன்னெடுக்க முடியாத சூழலில், இணையவழியூடாக முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே18ம் நாள், திங்கட்கிழமை (அமெரிக்க நேரம் 11 am, ஐரோப்பா 5 pm , தமிழகம், தாயகம் 9h30 ) இணையவழி www.tgte.org / Facebook : @tgteofficial மூலமும், உலகத்தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அவர்களுடைய பேருரையினைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கபட்ட மக்களுக்கான நீதியின் குரலாக தொடர்ந்து உழைத்துவருவதோடு, உலக மட்டங்களில் அமைதிக்கும், இராஜதந்திர அணுகுமுறைக்குமான தூதராரக உலகத்தினால் மதிக்கப்படுபவரராக José Manuel Ramos-Horta விளங்குகின்றார். கொரோனாவுக்கு பின்னராக உலகச்சூழலில் தமிழர்கள் தமக்கான நீதியையும், அரசியல் இறைமையினையையும் பெற்றுக் கொள்வதற்கு, தனது நீண்ட அனுபவத்தின் ஊடான அணுகுமுறைகள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.