முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு-கொளத்தூர் மணி கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு புல்டோசர் வைத்து இடித்து தள்ளியதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை,

“2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்து முடித்தது. போராளிகள் மட்டுமல்ல பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் படுகொலைக்கு உள்ளானார்கள்.

சொந்த மக்களை பலி கொடுத்ததன் நினைவாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தைக் கூட சட்டவிரோதமானது என்று அறிவிக்கிறது இலங்கை அரசு.

தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, தாயக உரிமை, தமிழ்தேச உரிமை, ஆகியவற்றின் நினைவாக 2008இல் மாபெரும் நிகழ்வாய் நடந்த  பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டு 2018இல் நினைவுத் தூணாக மாற்றி அமைக்கப்பட்டு அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனை சட்ட விரோதம் என்று இலங்கை அரசு கூறுவது நியாயமற்ற ஒன்று.

இந்த உரிமைகள் அய்க்கிய நாடுகளின் சர்வதேச கோட்பாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.  இந்த கல்வெட்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களையும் கைது செய்துள்ளது.

முன்னர் இருந்த துணைவேந்தரால் திறந்துவைக்கப்பட்டதை , இப்போது பதவிக்கு வந்துள்ள துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். நியாயமாக அவர் பதவி விலகி இருக்க வேண்டும். அப்படி விலகி இருந்தால், உலகத்தில் இந்தப் பிரச்சனை மேலும் கூடுதலாக ஈர்த்து இருக்கும்.

அய்.நாவின் மனித உரிமை விசாரணை ஆணையத்தில் உள்ள இலங்கை அரசு அய்.நாவில் தந்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் சென்று அந்த நாட்டின் வெளிநாட்டுத்துறை அமைச்சர் சந்தித்தார். அவருடன், 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துமாறு தாம் வலியுறுத்தியதாக செய்தியாளர்களுக்குப்  பேட்டியும் அளித்துள்ளார்.

13 ஆவது சட்டத்திருத்தம் ஈழத்தமிழர்களுக்கு அரைகுறை உரிமைகளை வழங்கியது என்றாலும் இந்திய அரசின் தலையீட்டினால் உருவாக்கப்பட்ட சட்டத் திருத்தம் ஆகும். இதை நிறைவேற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் இந்திய அரசுக்கும் உண்டு. ஆனால் இந்திய அரசின் கோரிக்கையைப் பற்றிக்  கவலைப்படாமல் மாகாணங்களையே ஒழித்துவிட முடிவுசெய்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு சென்று திரும்பிய ஒரு சில நாட்களிலேயே இப்படி ஒரு நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்திருப்பது இந்தியாவின் தலையீட்டை நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என்று அவமதிக்கிற ஒரு செயலாகவே கருத வேண்டும்.

ஏற்கெனவே ஈழப்போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுநாளை நடத்தவும், உண்ணாநிலை  என்ற அறவழிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த மாவீரன் திலீபன் நினைவு நாளை அனுசரிப்பதற்கும் இலங்கை அரசு தடை போட்டது. அதன் நீட்சியாகவே இந்த இடிப்பும் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. இடிக்கப்பட்டது கற்களால் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்ல. அந்த கல்வெட்டுக்குள் உலகம் முழுவதும் வாழும் தழிர்களின் உணர்வுகள் பொதிந்து நிற்கின்றன. இறுதிப்போரில் உறவுகளையும், குழந்தைகளையும், நட்புகளையும் இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் பலிகொடுத்துவிட்டு நிற்கும் ஒரு இனத்தை இதைவிட வேறு எப்படி அவமதிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு இன வெறி அரசின் கீழ் தமிழ் மக்கள் எப்படி தொடர்ந்து குடிமக்களாக வாழ முடியும் ? உலகத்தமிழர்களின் முன் இந்தக் கேள்விகள்தான் இந்த இடிப்புகளின் வழியாக எழுந்து நிற்கிறது”