முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதி மகாவலி அதிகார சபை வசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான தமிழர்களின்  பெரும்பகுதி நிலங்கள்,  தனிச் சிங்களமயமாகும் அபாயத்தில் உள்ளது.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 13 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி அதிகார சபையின் கீழ் செயல்பட ஏற்பாடு செய்யுமாறு  மகாவலி அதிகார சபை வடக்கு மாகாண  ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய வெலிஓயாவில் இருந்து கொக்குளாய் கொக்குத்தொடுவாய், முள்ளியவளை,  தண்ணீரூற்று என மாவட்டச் செயலகத்தை அண்மித்த பிரதேசம் வரையில், மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட பகுதியென கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறீசேனாவின் காலத்தில் அரச இதழ் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அரச இதழ் வெளியிடப்பட்டும் தமது அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட விடாது பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது  என அண்மையில் பொபஸ்வேவாவிற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபயவிடம் மகாவலி அதிகார சபை முறையிட்டது. இதன்போது அரச இதழ் இருப்பதனால் அதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு கோட்டாபய ஆளுநருக்கு பணித்திருந்தார்.

இதற்கமைவாக கடந்த புதன்கிழமை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பௌத்த விகாரையின் பிக்குகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகார சபையின் மாவட்ட அதிகாரிகள் இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் அதற்கான வரைபடங்கள் சகிதம் ஆளுநர் உள்ளிட்டோருக்கு காண்பித்து, அதனைத் தொடர அனுமதி கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர், கோட்டாபயவும் கூறியதனால் அதனை செய்யுங்கள் ஆனால் வெளியார் எவருக்கும் அங்கே நிலம் வழங்கப்படாமல் இருப்பதனை உறுதி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

தமது  காணிகளை மகாவலி அதிகாரசபையிடம் வழங்க சம்மதம் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்  எழுத்துமூல அறிவித்தலும் வழங்கி விட்டது  என்பதனை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறித்த கிராமங்களை சேர்ந்த  தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் தமிழ் மக்களுடைய  6 கிராம சேவகர் பிரிவுகளையும் மகாவலி எல் வலயத்தில் இணைப்பதற்கான முயற்சி அண்மைய சில காலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளியானதும், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கடிதமொன்றை மாகாவலிக்கு பொறுப்பான அமைசர் சமல் ராஜபக்சவிடம் கையளித்திருந்தனர். அந்த வகையில் இந்த வேலை  திட்டம் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது  வடக்கு ஆளுநரின் ஊடாக  மீண்டும் இந்த திட்டம்  கையில் எடுக்கப்பட்டுள்ளது.