முல்லைத்தீவின் எட்டு கிராம சேவையாளர்கள் பிரிவு குறித்து அமைச்சர் சமல் மாவைக்கு உத்தரவாதம்

மகாவலியால் முல்லைத்தீவு குடிப்பரம்பல் மாற்றமடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாவை. சோ.சேனதிராஜாவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மகாவலி எல் வலயத்தினை விஸ்தரிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, செம்மலை ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த எட்டுகிராம சேவகர் பிரிவுகளை மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டுவருதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை அடுத்து விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அம்முயற்சி இடைநிறுத்தப்படுவதாகவும் நேரடியாக களவிஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதென்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை(09-05) அன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் போஹஸ்வெ வவில் வைத்து மேற்படி எட்டு கிராமங்களும் மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படும் உத்தியோக பூர்வ வைபவம் நடைபெறப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்ட மாவை.சேனாதிராஜா, விடயத்தினை அவருடைய கவனத்திற்கு கொண்டவந்திருந்தார். எனினும் அவ்விதமான விடயங்கள் எவையும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியதோடு, நவீனமயப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தினை மகாவலி எல் வலயத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

எனினும், தமிழர்கள் பூர்வீகமாக வாழும் இந்தக் கிராமங்களை மகாவலி அதிகாரசபை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் அதன்மூலமாக சிங்கள குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு குடிப்பரம்பல் மாற்றப்படும் என்று மாவை.சேனாதிராஜா எடுத்துரைத்துள்ளார்.

இதனையடுத்து முல்லைத்தீவின் குடிப்பரம்பலை மாற்றும் வகையில் ஒருபோதும் செயற்பாடுகள் இடம் பெறாது என்றும் அந்த மக்களுடன் நேரடியாக கலந்தாராயவுள்ளதாகவும், தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் அமைச்சர் சமல் உத்தரவாதமளித்துள்ளார்.