இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு விதத்தில் கையாளுகின்றன. கூட்டாண்மை பங்காண்மை என்ற முறையில் இடம்பெறும் இந்தச் செயற்பாடு மக்கள் இறைமையை வல்லாண்மைகள் மேலாண்மைகள் நாடுகளை ஆளுபவர்களின் துணைகொண்டு ஒடுக்கி மக்கள் இறைமையைக் கட்டாய பகிர்வுக்கு உட்படுத்தும் நடைமுறையைக் கொண்டுள்ளன. அதாவது எந்த நாட்டு மக்களின் மனித வலுவையும் நாட்டின் மூலவளத்தையும் மக்களின் மூலதனங்களையும் தமது நாட்டின் அரசின் தேவைகளுக்கு பயன்படுத்தும் உத்தியாக இது இன்றைய உலகில் பரவலாக உள்ளது. மக்கள் இதற்கு அனுமதிக்காவிட்டால் ஆயுத பலத்தால் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் உயிருக்கு உடமைகளுக்கு நாளாந்த வாழ்வுக்கு நெருக்கடிகளை உருவாக்கி உட்கட்டுமானங்களைத் தகர்த்து அவர்களால் தங்களை எதிர்த்து நிற்க இயலாதவாறு செய்துவிட்டு அவர்களுக்கு நன்மைகள் செய்வதாகத் தங்கள் தீர்வை அவர்களே ஏற்க வைத்து மக்களை அடக்குவது அடங்க மறுத்தால் ஒடுக்குவது.
இதுதான் இன்றைய அரசியல் நாகரிகம். இதுவே இலங்கைத் தீவில் ஈழத்தமிழ்த் தேசஇனம் முதல் பலஸ்தீனத்து பலஸ்தீனத் தேசஇனம்; லெபனானிய தேசஇனம் உக்ரேனிய தேசஇனம் ஈரானிய தேசஇனம் வரை இன்றைய சமகால அரசியல் வரலாறாக உள்ளது. அதே வேளை பாதிப்புறும் தேசஇனங்கள் ஒன்றிணைந்து அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதை தடுக்க இவைகளுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது ஆக்கிரமிப்பாளர்களதும் ஆட்சியாளர்களதும் கூட்டு செயற்பாடாகவும் அமையும். உதாரணமாக ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் ஈழத்தமிழ்ப் போராளிகள் உலகின் மற்றைய போராளிகளாக விளங்கிய பலஸ்தீனிய லெபனானிய தேசங்களில் போர்ப்பயிற்சி பெற்ற தன்மையும், பின்னர் எவ்வாறு முஸ்லீம் ஈழத்தமிழர் உறவுச்சிக்கல்களை உருவாக்கி அது உருக்குலைக்கப்பட்டது என்பதையும் ஈழத்தமிழர் வரலாற்று ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது என்பதை இலக்கு கவனப்படுத்த விரும்புகிறது.
இவ்வாறான பிளவுகள் ஏன் கொண்டு வரப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பினால் எல்லை விரிவாக்க உலகில் மக்கள் இறைமையை மக்கள் அமைப்புக்களாலேயே பாதுகாக்க இயலும் என்பதால் உலகில் உள்ள மக்கள் அமைப்புக்களிடை ஒருமைப்பாட்டினை திட்டமிட்ட வகையில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் உருக்குலைத்தலைச் செய்தலுக்கே என்பது விடையாகும். அத்துடன் போராடும் மக்களிடை அவர்கள் வாழும் நாடுகளிலேயே பல்குழுக்களை உருவாக்கி பாழ்செய்யும் உட்பகையாக அதனை மாற்றி போராடும் மக்களின் ஒருமைப்பாட்டை உருக்குலைப்பதும் வல்லாண்மைகளின் வழமை. இத்தகைய அரசியல் வழமைகள் இதனை உலக அரசியல் முறைமையாகவே மாற்றிவிடுவதும் நடைமுறையாகவுள்ளது. இவற்றை உணர்ந்து இனியென்கிலும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இடையில் பாழ் செய்யும் குழுநிலைக்கட்டமைப்புக்களை விடுத்து ஈழத்தமிழர் ஒருமைப்பாட்டை கட்டி யெழுப்ப இயன்றது செய்ய வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் அமைப்புக்கள் பாதுகாப்பான அமைதியான வாழ்வில் வளர்ச்சிகளுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான நிபந்தனையாக தன்னாட்சி உரிமை பேணப்படவேண்டி உள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பேராசிரியர் அல்பிரட் டீ சாயஸ் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை குறித்து அளித்த விளக்கத்தில் தெளிவாகத் தெரிவித்தார்.
நீதி மறுக்கப்படுவதாலேயே தன்னாட்சி உரிமைக்கோரிக்கை எழுகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். சமுகநீதிக்கும் சனநாயகத்துக்கும் மூலைக்கல் தன்னாட்சி உரிமை என்பதைத் தெளிவுபடுத்தினார். ஈழத்தமிழர்களைப் பயங்கரவாதிகள் என தவறான விளக்கமளித்து அவர்களின் இனஅடையாளம் உலகால் ஏற்கப்படாது விடப்படுகிறது என்பதை விளக்கிய அவர் ஐ சி யே என ஆங்கிலத்தில் சுட்டப்படும் அனைத்துலக நீதிக்கான நீதிமன்றத்தின் 90 வது பிரிவின் கீழ் ஈழத்தமிழர்கள் அறிவுறுத்தல்களை பெற வேண்டுமென ஆலோசனையும் கூறினார். 25.02. 2019 இல் பிரித்தானியா சாகோஸ் தீவு குறித்த அனைத்துலக நீதிக்கான நீதி மன்றத்தின் தீரப்பில் சகோஸ் மக்களின் தன்னாட்சி உரிமையை மொரிசியசுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய பொழுது வன்முறைப்படுத்தியது என கூறியதைச் சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்களுக்கும் இது பொருந்தும் என தெளிவாக விளக்கினார். ஆனால் இன்று வரை ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் செயற்பாட்டாளர்கள் இந்த அனைத்துலக நிபுணரின் கருத்தைக் கூட உலக மயப்படுத்த இயலாது உள்ளனர்.
இந்நிலையில் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பினை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தன்னாட்சி உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில் எதிர்கொள்ள வேண்டுமென்பதற்கு இவரின் முடிபுகள் அனைத்துலக சட்ட வலு அளிக்கின்றன. இத்தகைய அனைத்துலக நெறிப்படுத்தல்களைக் கூட மக்கள் அந்த அந்த துறைகளில் கட்டமைக்கப்படக் கூடிய ஈழத்தமிழர்களின் மக்கள் அமைப்புக்கள் முன்னெடுத்து இருப்பின் இன்று ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற குழப்பநிலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இனியாவது இதனை அத்துறைகளில் உள்ள ஈழத்தமிழர்களும் அவர்களின் இளைய சந்தததியும் தாயகத்திலும் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் சிந்திக்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார வேண்டுகோளாக உள்ளது.
பின்லாந்தின் முன்னாள் பிரதம அமைச்சர் சான்னா மரினா அவர்கள் இன்றைய காலகட்டம் குறித்த செவ்வி ஒன்றில் யூரோ நியூசில் காலத்துக்கு ஏற்ப எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தும் செயற்திட்டமாக உருவாக்க வேண்டும். பின்னர் அதனைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியதையே இவ்விடத்தில் ஈழத்தமிழர்களுக்கு இலக்கு மீள் நினைவுறுத்த விரும்புகிறது.
மேலும் “தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டுமென்பதையே வடக்கில் தோல்வி அடைந்த கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயற்பட மாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. கொள்கை அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றோம். தேசிய மக்கள் சக்தி என்பது சிறிலங்கா மக்களுக்கான கட்சி. எனினும் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன. அதே வேளை கொழும்பு அரசுகள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டுள்ளன. ஆனால் எமது ஆட்சி அவ்வாறில்லை யாழ்ப்பாணம் மற்றும் தீவகப் பகுதிகளுக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு நயினாதீவு போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாண அரசாங்கம் (உள்ளாட்சி மன்றங்கள் ) கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்” இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்தநாயக்கா போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 984.73 மில்லியன் ரூபா மதிப்பிலான குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணியைத் தொடங்கி வைக்கையில் உரையாற்றியதாக வீரகேசரி நாளிதழின் 23.04.2026ம் திகதிய செய்தி தெரிவித்துள்ளது.
இந்த உரையில் தேசிய மக்கள் சக்தியின் சிறிலங்கா அமைச்சர் பிமல் ரத்தநாயக்கா சிறீலங்காவின் வடக்கு என்று ஈழத்தமிழர் தாயகத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைக் கோருபவர்களையும் சில குழுக்கள் எனச் சுட்டி அவ்வாறு அரசியல் உரிமைகளைக் கோருவதை இனவாதம் எனக் கூறியுள்ளார். சிறிலங்காவின் வடக்குக்கான அபிவிருத்தித் திட்டங்களை வடக்கில் செயற்படுத்துவதை யாழ்ப்பாணத்தைக் கைவிடாததன்மை என எடுத்துரைத்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளாட்சி மன்றங்களை யாழ்ப்பாண அரசாங்கம் எனச் சுட்டியுள்ளார். இவ்வாறு தேசிய மக்கள் சக்தி ஈழத்தமிழர்களின் தாயகமாக யாழ்ப்பாண வன்னி அரசுக்கள் பிரித்தானிய காலனித்துவத்தால் கைப்பற்றப்படும் பொழுது இருந்த நிலப்பரப்பு உள்ளது என்கிற வரலாற்றை மாற்றிச் சிறிலங்காவின் வடக்காக அந்தப் பகுதிகளை உலகுக்கு வரலாற்று மாற்றம் செய்கின்றார். ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவின் தேசஇனம் என்கிற வரலாற்றை மாற்றி சிறிலங்கா என்னும் பௌத்த சிங்கள நாட்டின் வடக்கில் வாழும் சமுகமாக ஈழத்தமிழர்களை வரலாற்று மாற்றம் செய்கின்றார்.
கூடவே யாழ்ப்பாண அரசில் பிரித்தானிய காலனித்துவத்தால கி.பி. 1796இல் கைப்பற்றப்பட்ட ஈழத்தமிழர்களின் அரசாங்கத்தின் இறைமையுடன் கூடிய ஈழத்தமிழர் தாயகம் பிரித்தானிய காலனித்துவத்தால் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் 04.02. 1948 இல் ஈழத்தமிழரின் விருப்புப் பெறப்படாது இணைக்கப்பட்டதால் ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை என்பது சிங்கள நவகாலனித்துவத்துள் உள்ளடக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தன்னாட்சியை மீளப் பெறுவது என்கிற ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படையையே இறைமை நீக்கம் தேசிய நீக்கம் செய்யும் வரலாற்று மாற்றமாகச் சிறிலங்காவின் உள்ளாட்சி சபைதான் அவர்களுக்கான அரசாங்கம் என்கின்ற ஒரே நாடு சிங்கள நாடு ஒரே சட்டம் பௌத்த ஆகமச் சட்டம் ஒரே நிர்வாகம் சிங்கள நிர்வாகம் ஒரே சட்டவாக்க சட்ட அமுலாக்கம் சிங்கள பௌத்த சட்டவாக்க சட்ட அமுலாக்கங்கள் என்கின்ற வரலாற்று மாற்றத்தை தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரின் ஒவ்வொரு சொல்லாட்சியும் வெளிப்படுத்திய உரையாக இந்த உரை அமைந்துள்ளது. ஈழத்தமிழரின் பாதுகாப்பான வாழ்வுக்கான அவர்களில் இருந்து யாராலும் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்கள் அரசியல் உரிமைகளைக் கோருவது என்பதை இனவாதம் என்பது இறைமை மறுப்புக்கான உத்தி என்பதையும் இலக்கு தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறது.
இந்நேரத்தில் ஈழத்தமிழரின் வரலாற்றை இன்றைய தேசிய மக்கள் சக்தி தலைகீழாக மாற்றுவதை ஈழத்தமிழர்களில் சிலர் கொழும்பில் கம்பன் விழா நடாத்தி உலகில் ஈழத்தமிழர்கள் புலம்பதிந்து வாழும் நாடுகளில் உள்ள தங்களின் தோழர்களையும் அழைத்து தமிழகத்தவர்களையும் துணைக்கழைத்து சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுர குமரதிசநாயக்காவுக்கு “வரலாற்றை மாற்றியவன்” என விருது கொடுத்து நாம் மேலே குறிப்பிட்ட ஈழத்தமிழர் என்னும் தேச இனத்தைச் சமுகமாக மாற்றும் தேசிய நீக்கத்தை அங்கீகரிக்கின்றார்கள். இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற இறைமையுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை இலங்கையின் யாழ்ப்பாண வன்னியரசின் நிலப்பரப்புக்களில் வாழ்ந்து மீளவும் தங்கள் இறைமையுள்ள தன்னாட்சியின் மூலம் தங்களின் பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை மீளமைக்கப் போராடி வரும் ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா இறைமை நீக்கம் செய்வதை அங்கீகரிக்கின்றார்கள். இதன் வழி ஈழத்தமிழர்களின் மக்களாணை தங்களின் இன்றைய செயற்பாடுகளுக்கு உண்டெனச் சிங்கள அரசு உலகிற்கு நியாயப்படுத்தும் என்பதை இலக்கு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்குக் கவனப்படுத்த விரும்புகிறது.
இதனை தாயகத்திலும் உலகிலும் உள்ள ஈழத்தமிழர்களின் இலக்கியப் பிரதிநிதிகளாகத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட ஒரு சிலர் கம்பனின் இலக்கியக் கோட்பாடே என்னென்று தெரியாத நிலையில் தங்களுடைய தன்னலத்துக்காகச் செய்கின்றார்கள் என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும். ஆனால் அனைத்துலக சமுகத்துக்குத் தெரியாது என்பதே பிரச்சினை. இவர்களின் இந்த இழிசெயலால் உயிராலும் இரத்தத்தாலும் உடலுறுப்பு இழப்புக்களாலும் வாழ்விழப்புக்களாலும் முத்திரையிடப்பட்ட ஈழத்தமிழர்களின் நடைமுறையரசை சிறிலங்கா 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் 146000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்து மீளவும் தனது பாராளுமன்றக் கொடுங்கோன்மையுடன் கூடிய ஆயுதப்படை நிர்வாகத்தின் மூலம் கடந்த பதினேழு ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவை பெற்றுவருகிறது என்பதே நடைமுறை உண்மை. அந்நிலையினை மாற்றியமைக்கத் தேசிய மக்கள் சக்தி அரசும் இதுவரை எதனையும் நடைமுறையில் செய்யவில்லை என்கின்ற வரலாற்று உண்மை இவ்விருது வழங்கலால் பாதிப்புறும் என்பதையே இலக்கு இவ்வாரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அதுவும் அன்னை பூபதி ஈழத்தமிழர்கள் சிங்கள பௌத்த பேரினவாத இனஅழிப்பு அரசை உரிய தீர்வு வராதவரை ஒருபொழுதும் ஏற்க மாட்டார்கள் அதனை ஏற்க வைப்பதற்கான இந்திய மேலாண்மை அரசின் செயற்பாடுகளையும் ஏற்க மாட்டார்கள் என உலகிற்கு தன்னுயிரையே அகிம்சை வழியில் ஈகம் செய்த ஏப்ரல் மாதத்திலேயே இத்தகைய ஈழத்தமிழரின் வரலாற்றையே மாற்றுகிற செயல்களை ஈழத்தமிழர்களே செய்கின்றார்கள் என்கின்ற பொழுது இவர்கள் தமிழினத்தவரா என்கின்ற ஐயம் இயல்பாகும்.
ஆயினும் இவ்விடயத்தில் உணர்ச்சி வசப்படாது சனநாயக வழிகளில் அகிம்சை முறையில் அனைத்துலகச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இத்தகைய செயற்பாடுகளைச் செய்பவர்களுக்கு ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைக் கருத்தை கருத்தால் எதிர்க்கும் எழுத்துக்கள் பேச்சுக்கள் வழி வெளியிட்டு இவர்களின் செயலை உலகுக்குத் தெளிவாக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.
இந்த விருது ஈழத்தமிழர்களால் வழங்கப்படும் விருதல்ல என்பதைச் சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்காவுக்கும் தெளிவுபுடுத்தி இந்த விழாவிலேயே கருஜெயசூரியாவுக்கும் விருது வழங்கப்படுவது அநுர தோற்பார் என்கிற எதிர்பார்ப்பில் நடைபெறுகிற பாதபூசை என்பதையும் எடுத்து விளக்க வேண்டிய நேரமிது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்




