முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்க முயற்சி

தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கோரியுள்ளதாகவும் சன்ன ஜயசுமண ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவியை மாற்றுவதற்கான நகர்வுகள் இருப்பதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். தினேஸ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க உத்தேசித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக நேரிடும் எனவும், பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

“இதற்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கமாட்டோம். மகிந்த ராஜபக்ஷ இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வு காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.