மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

2002இல் சர்வதேச கண்காணிப்புடனும் எண்ணிலடங்கா சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் வன்னியில் ஆரம்பித்த போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளும், 5 வருடங்களில் இடப்பெயர்வுகளும் பதுங்குகுழிகளும் ஆக மாறியது.

கொலைகள் செய்வதற்கு வசதியாக 2009 ஏப்பிரலில் மாறி மாறி மூன்று ”பாதுகாப்பு வலயங்கள்” தோன்றின. தொடர்ந்து மே-17-18 களில் செல் துண்டுகளை உடலில் எங்கும் தாங்கியபடி வெளியேறிய வன்னி மக்கள் முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைப்பு.  பிறகு என்ன? காணாமல் ஆக்கப்படுதலும், பாலியல் வன்புணர்வுகளும், வழக்குகள் இன்றி பல ஆண்டுகள் சிறையிலும் அகதி தஞ்சம் தேடி ஓடியவர்களும் மிருகங்கள் போல் வெளிநாடுகளில் துன்புறுத்தப்படுதலுமாக தொடர்கிறது எமது வாழ்க்கை.

பூகோள சக்திகளின் நன்மைக்காக, உரிமைகள் பறிக்கப்பட்டு, உலகமே புறம்தள்ளும் பெரியவொரு மக்கள் தொகுதிக்குள் இன்று ஈழத்தமிழரும் இணைந்து விட்டார்கள். நாம் என்ன செய்யலாம்?

எம்மவர் மத்தியில் உள்ள உணர்வாளர்களின் செயற்பாடுகள் இன்று பல தளங்களில் விரிவடைந்துள்ளன. மனிதாபிமான செயற்பாடுகளில் மோசமாக பாதிக்கப் பட்டவர் களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இருந்து பள்ளிக்கூடங்கள், வைத்திய சாலைகளை சீரமைப்பது வரை இது நீள்கிறது. தொடரும் உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி ஐநாவிலும் ஏனைய அதிகார மையங்களிலும் அறிவூட்டும் வேலையையும் செய்கிறோம்.

போர்குற்றம், இனவழிப்பு சார்ந்த வழக்குகளை உலகெங்கும் அவற்றை வழக்குகளாக ஏற்கும் நீதிமன்றங்களில் முன்னெடுக்க வேண்டும் என்று முனைபவர்களும் எம்மில் உள்ளார்கள்.  பூகோள அரசியல் சூழலில் மாற்றம் வரும்போது தாயகம்-தேசியம்-சுயநிர்ணயம் (தாதேசு) சாத்தியம். அதுவரை இதை உயிரோட்டத்துடன் நாம் வைத்திருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் எம்மிடம் உண்டு.20190518 140112  மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

இவ்வாறு நாம் பல தளங்களில் இயங்குகிறோம். இத்தளங்களில் இயங்குபவர்கள் எல்லோருக்கும் போதியளவு ஒத்தியங்கும் செயற்பாடுகள் இல்லை என்ற மனக்குறையும் உண்டு.

பூகோள அரசியல் தௌிவின் தேவை

எங்கும் போலவே நமக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஒன்றும் பெரிய தீமையல்ல. கருத்து வேறுபாடுகளுக்குள் இருந்துதான் பெரும் சக்திகள் வெளிப்படும்.  தாயக ஈழத்தமிழர் மத்தியிலோ அல்லது புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியிலோ இனிவரும் சந்ததிகளில் அப்படியொரு சக்தி எழும்பும் சாத்தியங்கள் நிச்சயம் உண்டு உண்டு. அவ்வாறு எழும்பும் சக்திக்கு பூகோள அரசியல் தெளிவு இல்லாவிட்டால்….

தமிழர் ஒருமையை முன்னிறுத்தி வளர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழரின் எதிரியாக செயற்படுகிறது. இது இன்று தெளிவாக தெரிகிறது. 2009 காலகட்டத்திலும் இது தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் அது நிலைத்து நிற்பதற்கு காரணம் பூகோள அரசியல் தெளிவு எமக்கு இல்லாததே. அதோடு இது தமிழரின் கூட்டு  என்ற கருத்தாக்கம் தமிழர் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டதும் ஒரு காரணம். அதை மாற்றுவதற்கு காலம் தேவை. அந்தக் காலத்தில் அதிகார சக்திகள் இதை தமது கருவியாக கையாண்டு வருகிறார்கள்.

இது போலத்தான் பூகோள அரசியலை புரியாது இனிவரும் காலத்தில் வளரும் தமிழர் ஒற்றுமையும் இருக்கும். இப்படி வளரும் ஒரு அமைப்பும் தமிழர் எதிரியாக ஒரு காலத்தில் செயற்படும் சாத்தியம் அதிகம். இவ்வாறு பூகோள அரசியல் புரிதலின்றி உருவாகும் தமிழர் ஒற்றுமை பற்றி நாம் பயத்துடனும் சந்தேகத்துடனுமே அணுக வேண்டும். ஏனெனில் ஆழமான பூகோள அரசியல் விளக்கம் அற்று வளரும் ஒற்றுமை பூகோள சக்திகளின் கருவியாக மாற்றப்படும் சாத்தியம் அதிகம். பூகோள சக்திகளின் ஒரு அம்சம்தான் ஐநாவும் என்பதை ஏற்றுக்கொள்ளும் புரிதலுக்கு பெரும்பான்மை தமிழர் இன்று கூட  வர முடியாதுள்ளனர். சில வேலைகளுக்கு ஐநா சாத்தியமாக இருந்தாலும் ஐநாவை நம்பி வளரும் ஒரு தமிழர் கூட்டு மேலே சொன்ன காரணங்களுக்காக அபாயமானது.1484232963  மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

மேலோட்டமாக பூகோள அரசியலை பற்றி ஈழத்தமிழருக்கு ஓரளவு தெரியும். ஆனால் ஆழம் புரியாது. அண்மையில் லத்தீன் அமெரிக்க வரலாற்று நூல் ஒன்றை படித்த ஒரு ஈழத்தமிழர் சொன்ன ஒரு வார்த்தை பூகோள அரசியலின் ஆழத்தை உணர்த்தி நிற்கிறது. அவர் லத்தீன் அமெரிக்க வரலாற்றை படித்துவிட்டு அது ஈழத்தமிழர் வரலாற்றின் கொப்பி பேஸ்ட் (Copy-Paste) என்று விபரித்தார். எமக்கு நடந்தது ஏறக்குறைய அதே போல பல மக்களுக்கும் நடந்திருக்கிறது என்ற உண்மையை நாம் உள்ள வாங்க வேண்டும்.

இன்னுமொரு உதாரணம். சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எத்தனை செய்திகளும் அறிக்கைகளும் ஐநாவில் இருந்து வந்தன என்று சிந்தித்து அத்தனை அறிக்கைகள் ஐநாவில் இருந்து வல்லரசுகளின் கொடுமைகள் பற்றி வந்தனவா என்று ஒப்பிட்டால் ஐநா என்பது எது என்று புரியும். மேற்குலக நிதியுடன் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புக்களும் இதற்கு விதிவலக்கல்ல. அவை லங்கா அரசை கடுமையாக சாடினால் நாம் மகிழ்கிறோம். அவை வல்லரசுகளை சாடினால் அவர்களுக்கு நிதி கிடைக்காது என்பதுதான் உண்மை. இம்மாதிரி அகப்பட்டு கிடக்கும் அமைப்புகளின் பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை எமது தேவைக்கு நாம் கையாளலாம் ஆனால் அவை நமது போராட்ட தோழமை சக்திகள் அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இணையாத சந்ததிகள்

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, வரலாறும் அரசியல் தெளிவும் அடுத்தடுத்த தலைமுறைகளை அடைவதற்காக, ஈழத்தமிழர் சந்ததிகள் இடையே தொடர் உரையாடல்கள் அதிகமாக தேவை. முக்கியமாக முள்ளிவாய்கால் கண்ட ஈழத்தமிழர் சந்ததிக்கு ஒரு அபூர்வமான அனுபவம் இருக்கிறது. வளரும் சந்ததிக்கு முக்கியமாக வெளிநாடுகளில் வளரும் சந்ததிக்கு அபாரமான கல்வி வசதிகளும் தேடலுக்கான திறமைகளும் இருக்கிறது. இன்று இவையிரண்டும் இணையவில்லை. பெற்றோர் பிள்ளைகள் மட்டத்தில் கூட இணையவில்லை. இரண்டும் இணைந்து தேடினால் வரலாற்று அறிவும் பூகோள அரசியல் அறிவும் சமூகத்தில் வளரும். அதுவே விடுதலைக்கு முதல்படி.

மக்கள் சக்தி

இன்று உலகத்துக்கு பூகோள அரசியலை கற்பிப்பவர்களில் அதிகம் அறியப்பட்டவர் நோம் சொம்ஸ்கி. அவருடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் நூல்களும் பிரமிப்பை தருபவை. அதுமட்டுமல்ல அவரைப்பற்றிய எழுத்துக்களும் நூல்களும் கூட ஏராளம். ”மக்கள் சக்தியே உலகின் இரண்டாவது வல்லரசு” என்ற அவர் விபரித்திருக்கிறார்.

மக்கள் சக்தியின் மேலும் மக்கள் தமக்கு எது நன்மையானது என்ற சிந்தித்து தெளியும் மக்களின் வல்லமை மேலும் அவர் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். மாறாக எமது கலாச்சாரங்களிலும் சினிமாக்களிலும் தலைவர்களுக்கு அபரித மதிப்பு கொடுத்து மக்களை மாந்தைகளாக சித்தரித்து மக்களின் சிந்தித்து செயற்படும் திறனை இவை பெரிதுபடுத்துவதே இல்லை. மக்களை வழி நடத்துவதற்கும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு மட்டுமே தலைவர்கள் உருவாவதில்லை.ltte women brigade with leader  மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

மக்களின் கருத்துக்களை மதித்து அவர்களை ஊக்குவித்து செயற்பட வைப்பவர்களே தலைவர்கள். இம்மாதிரிான தலைவர்கள் இன்று எம்மத்தியில் தேவை. விடுதலைப்புலிகளின் தலைவர் அவ்வாறு தம்மை செயற்பட வைத்தார் என்று பல பெண்  போராளிகள்   என்னிடம்  சொல்லியிருக்கிறார்கள்.

போராட்ட நோக்கம்

உலகில் இயங்கும் அரசுகளின் தன்மையை நோக்கும் போது தமிழீழ அரசு மட்டுமே எழுச்சி தரும் நோக்கமாக இருக்க முடியாது. நீண்ட கால நோக்கில் நாம் எதை நோக்கி போராடுகிறோம் என்ற தௌிவும் எமக்கு தேவை. நோம் சொம்ஸ்கி ”வருங்கால அரசு” என்ற ஒரு நீளமான ஆக்கத்தில் மூன்று விதமான அரசுகளை பற்றி விபரிக்கிறார். 1930களில் பேசப்பட்ட ”தாராளவாத அரசு”, இரண்டாம் உலக போருக்கு பின்னர் பிரபலமடைந்த ”அரச சோசலிசம் மற்றும் அரச முதலாளித்துவம்”, மற்றும் அவர் முன்வைக்கும் ”தாராளவாத சோசலிசம் அல்லது பலமான மத்திய அரசற்ற மக்கள் ஆட்சி”.  இதுவே அவரது கனவாகவும் உள்ளது.

அதே ஆக்கத்தில் அவர்,

“இனி வரும் காலங்களில் தாராளவாத சோசலிசம் வளர்ச்சி அடையாலாம். ஆனால் இன்று அது போன்ற எதையும் நாம் காண முடியாது. இருந்தும் அதன் சில அம்சங்களை சில இடங்களில் காணலாம். தனிமனித உரிமையின் முழுவடிவத்தை சில மேற்குலக சனநாயத்தில் பார்க்கிறோம். ஆனால் இவற்றில் துயரமான குறைபாடுகள் பல உண்டு. மக்கள் விழிப்புணர்வை தட்டி எழுப்பி அவர்களை சமூகத்தில் ஈடுபடுத்தும் பல மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர இயக்கங்களிலும் இதன் சில அம்சங்களை பார்க்கிறோம். ஆனால் இவ்வியக்கங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத சர்வாதிகார போக்கும் சேர்ந்தே தோன்றுகிறது. ….”

இன்று நிலவும் கோணங்கி சனநாயக அரசுகளிலிருந்து வேறுபட்ட மக்களாட்சியையே மேலே குறிப்பிட்ட ஆக்கத்தில் நோம் சொம்ஸகி பேசுகிறார். இவ்வாக்கத்தின் மொழியாக்கத்தை இப்பத்தியில் விரைவில் எதிர்பாருங்கள்.