உலக உரிமைப் போராட்டத்தினமாக முள்ளிவாய்க்கால் நினைவுதினம் திகழ்கிறது

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் தேசஇனமாகத் தாயகத்திலும்ää உலகெங்கும்; தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்களாகவும், 11 வது ஆண்டாக முள்ளிவாய்க்கால், தமிழினஅழிப்புத் தினத்தை நினைவு கூருவதற்கான வாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினம்,உலக வரலாற்றில் உரிமைப்போராட்டம் ஒன்றை படைபலம் கொண்டு இனஅழிப்பின் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு ஒடுக்கிய தினமாக உள்ளது.
முன்னாள் கிழக்குப் பாக்கிஸ்தானின் (இன்றைய பங்களா தேசத்தில்) டாக்காப் பல்கலைக்கழகத்தில் மொழியுரிமைக்காப் போராடிய மூவர் அந்நாளைய பாக்கிஸ்தான் அரசால் கொன்றழிக்கப்பட்ட தினமாகிய 21.02.1952 ஐயே பின்னர் ஐக்கியநாடுகள் சபை உலகத்தாய்மொழித் தினமாக அறிவித்தது.

அதுபோல உலகின் குடிமக்களாகவும் உள்ள ஈழத்தமிழர்களின்; மேல் சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்படுத்திய இனஅழிப்பு, பண்பாட்டுஇனஅழிப்பு, மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களின் அடிப்படையிலான இனங்காணக் கூடிய படைபல அச்சுறுத்தல் என்பவற்றுக்கு எதிராகவே, தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் காத்துக்கொள்வதற்கு பல மக்களாட்சி வழிகளிலும் போராடினர்.

இவை எல்லாம் சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கங்களால் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் படைபலம் கொண்டு ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே,ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தித் தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்தவாழ்வையும் பாதுகாப்பதற்கான, சீருடை அணிந்த முப்படைகளையும், தங்களுக்கான சட்டவாக்க முறைமைகளையும், தங்களுக்கான சட்டஅமுலாக்க முறைமைகளையும், தங்களுக்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும் தரக்கூடிய அரசுநோக்கிய அரசை ( Defacto State) நடைமுறைப்படுத்தினர்.

இந்த நடைமுறை அரசின் மூலமே, 22.05.1972ம் ஆண்டின் சிங்கள பௌத்த குடியரசு அரசியமைப்பின் மூலம் நாடற்ற தேசஇனமாக்கப்பட்ட தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் முன்னெடுப்பதற்கான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், தங்களின் 37 ஆண்டு கால வாழ்வை,தன்னாட்சி உள்ள தங்களின் இறைமையின் கீழ் கட்டுப்படுத்தி வாழ்ந்தனர் என்பது உலக வரலாறு.

37 ஆண்டுகளாகத் தனது படைபலத்தால் தமிழர்களின் அரசியல் பணிவை வலுக்கட்டாயமாகப் பெற்று வந்த சிறிலங்கா அரசு தனது இனஅழிப்புக்கு ஆதரவு தேடும் வகையில் தனது சட்ட ஆட்சிக்கு அமைய மறுக்கும் மொழிவெறி எனவும், தனது இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான பிரிவினைவாதம் எனவும், தனது இறைமைக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் எதிரான பயங்கரவாதம் எனவும் காலத்துக்குக் காலம் வரலாற்றுத் திரிபுவாதங்களைச் செய்து,தங்கள் சந்தை இராணுவ நலன்களுக்காக சிறிலங்கா அரசைப் பயன்படுத்திய வல்லாண்மைகளுடன் இணைந்து, தனது படைபல தமிழின அழிப்பு அரசியற் செயற்திட்டத்தின் உச்சமாக ஈழத்தமிழின அழிப்பினை உலகின் வரலாறு காணாத மனிதவதை மூலம் முள்ளிவாய்க்காலில் உச்சப்படுத்தி, ஒரு சிறிய தேசிய இனமாகிய ஈழத்தமிழினத்தின் பத்திலொரு மக்கள் தொகையையே இனஅழிப்புச் செய்த தினம் தான் 19.05.20009.

எனவே இந்த முள்ளிவாய்க்கால் தினம் என்பது உலகவரலாற்றில் மக்களினம் ஒன்றின் உரிமைப்போராட்டத்தை,எந்த வகையிலும் படைபலத்தைப் பயன்படுத்தி இனஅழிப்புச் செய்வதன் மூலம் முடிக்கலாம் என உலகுக்குத் தவறான அரசியல் வழிகாட்டலை வெளிப்படுத்திய தினம். பங்களாதேச மக்களின் மொழியுரிமைப்போராட்டத்தின் உண்மைத்தன்மையை ஏற்று அனைத்துலக அமைப்பான ஐ.நா. உலகத்தாய்மொழித்தினத்தை அறிவித்தது போலவே ஈழத்தமிழினத்தின் உரிமைபபோராட்டத்தின் உண்மைத்தன்மையை ஏற்று ஒவ்வொரு ஆண்டிலும் வரும் மே 19 ஐ உலக உரிமைப்போராட்டத்தினமாக அறிவிப்பதன் வழியாகவே உலகம் ஈழத்தமிழ் மக்களும் உலக குடிகள் என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக உலகெங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது.