மியான்மரில்  இணைய சேவைகள் முடக்கம்- ட்விட்டர் நிறுவனம் கண்டனம்

மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு ட்விட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதோடு அந்நாட்டுத் தலைவர்களை சிளையில் வைத்துள்ளது.

இந்நிலையில், அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில்   முக நுால் பயன்பாட்டுக்கு மியான்மர் இராணுவம் தடை விதித்தது. இதன்படி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முக நுால் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் ட்விட்டர் சேவையும் மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இலட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் வெளியாகி வந்தன. இதுதொடர்பாக அந்நாட்டு தகவல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களில், “போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை ட்விட்டர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு ட்விட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைக் கண்டித்தும் மக்களால் தோ்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரியும் நாட்டில் மிகப்பெரிய நகரான யாங்கோனின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று  கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.