‘மலையக தசாப்தம்’ வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால் இச்சமூகத்தை திருப்திப்படுத்துவதையே சிலர் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.கடந்தகால மற்றும் சமகால ஆட்சியாளர்களும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை.இந்நிலையில் மலையக மக்களின்  பொது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலத்தில் ‘மலையக தசாப்தம் ‘ எனப்படும் பத்து வருட பல்நோக்கு கிராம மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதன் நம்பகத்தன்மையை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

naam 200 'மலையக தசாப்தம்' வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது - துரைசாமி நடராஜாமலையக மக்களின் வரலாறு இந்நாட்டில் 200 வருடங்களாகியுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமேயாகும்.எனினும் இம்மக்களின் வரலாற்றுக்கேற்ப வாழ்க்கை நிலைமைகள் அபிவிருத்தி அடைந்துள்ளனவா என்று சிந்திக்கையில் திருப்தியற்ற வெளிப்பாடுகளே மேலோங்கிக் காணப்படுகின்றன.

மலையக சமூகத்தின் கட்டமைப்பில் சிற்சில மாறுதல்கள் இப்போது ஏற்பட்டு வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.என்றபோதும் இது இன்னும் முழுமை பெறுவதாக இல்லை.மலையக சமூகத்தின் கல்வி ஈடுபாடு மெச்சத்தக்கதாக உள்ளது.தமது பிள்ளையை கல்வி பெறச்செய்து உச்சத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற ரீதியில் பல பெற்றோர்கள் சிரத்தைகாட்டி வருகின்றனர்.இதற்கேற்ப அண்மைகாலமாக மாணவர்களின் கல்வி அடைவுகள் அதிகரித்துள்ளதோடு இதனூடாக பெறுபேற்று அபிவிருத்தியையும் அவதானிக்க முடிகின்றது..

மலையக இளைஞர்கள் பலர் இன்று அரசதுறை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.ஆசிரியர்கள் என்ற நிலையிலிருந்தும் முன்னேறி கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பலரும் இச்சமூகத்தில் உருவாகியுள்ளனர்.இலங்கை நிர்வாக சேவையிலும் எம்மவர்கள் கோலோச்சுகின்றனர்.கிராமசேவை உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல அரசு உத்தியோகங்களிலும் எம்மவர்கள் ஈடுபட்டு சமூகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இவற்றைத்தவிர தனியார் தொழிற்றுறை மற்றும் வர்த்தகத்துறை என்பவற்றிலும் மலையக சமூகத்தினர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.இவற்றோடு இம்மக்களின் குடியிருப்பு நிலைமைகளும் முன்னரைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டாதல் வேண்டும்.தனிவீடு என்பது இவர்களில் பலருக்கு இன்னும் கனவாக இருந்து வருகின்றபோதும் இருக்கின்ற வீட்டினை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் இவர்களின் ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகின்றது.இன்றைய இளைஞர்கள் இதில் அதிகமாகவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

malaya2 'மலையக தசாப்தம்' வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது - துரைசாமி நடராஜாஇவையெல்லாம் மலையக சமூகத்தினர் தொடர்பில் சாதகமான பக்கங்களாக காணப்பட்ட போதிலும் இதற்கு எதிரான பக்கங்களும் அதிகமாகவே காணப்படுகிறன.நாட்டின் தேசிய வருவாய்க்கு தோள் கொடுக்கும் இம்மக்கள் இன்னும் பல தேவைகளும் நிறைவு செய்யப்படாத நிலையில் துயர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும். கூடிய நேரம் வேலைசெய்து குறைந்தளவு ஊதியத்தை இவர்கள் பெற்றுக் கொள்ளும் நிலையில் இவர்களின் உழைப்பை உறிஞ்சி முதலாளிகள் கொளுத்திருக்கின்றனர்.இதேவேளை தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனியினர் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வருவதாக தொழிலாளர்கள் உள்ளம் குமுறுகின்றனர்.

கம்பனியை நிர்வகிக்கும் மேல்மட்ட உத்தியோகத்தர்களுக்கு அதிகளவு ஊதியம் வழங்கப்படுகின்ற நிலையில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்பதில் கம்பனியினர் ஆர்வம் செலுத்துவதில்லை.சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேசப்படும் போதெல்லாம் ஆயிரம் காரணங்களை முன்வைத்து பஞ்சப்பாட்டு பாடும் கம்பனியினர் தம்மை கிள்ளுக்கீரையாக கருதுவதாகவும் தொழிலாளர்கள் மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.இவற்றுக்கிடையே கம்பனியினர் பிரேரிக்கும் வெளியார் உற்பத்தி முறை எந்தளவுக்கு தமக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பாகவும் தொழிலாளர்களுக்கு சந்தேகமுள்ளது.

பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அபிவிருத்தி என்னும் போர்வையில் இந்நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் கண்டனங்கள் இல்லாமலில்லை.இதனிடையே மலையக மக்களின் செறிவைக் குறைத்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தும் ஒரு முயற்சியே பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்களின் சுவீகரிப்பின் அடிப்படையாகும் என்று கூறுவார்களும் உளர்.எவ்வாறெனினும் மலையக சமூகத்தினரின் நெருக்கீடுகள் ஒரு போதும் குறைவில்லாது தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.

1948 ம் ஆண்டு இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்ட நிலையில் பின்னர் இவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளும் வரை அரசியலில்  இம்மக்கள் அநாதைகளாகி இருந்தனர்.இவற்றை மீளவும் பெற்றுக் கொண்டதன் பின்னரே அரசியல் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்தது.இந்நிலைக்கு தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் கை கொடுத்தது என்பதும் முக்கியஸ்தர்களின் கருத்தாகும்.எனவேதான் சிறுபான்மையினருக்கு நலனளிக்கும் இத்தேர்தல் முறையின் இருப்பினை தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறுபான்மை பிரதிநிதிகள் கோஷமெழுப்புகின்றனர்.இதனிடையே புதிய தேர்தல் முறை ஒன்றினை அறிமுகம் செய்கின்றபோது சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அது இடம்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.

malaya 'மலையக தசாப்தம்' வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது - துரைசாமி நடராஜாஇவற்றுக்கும் மத்தியில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு சமத்துவமான, ஆரோக்கியம் மிக்க வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டியதன் அவசியத்தை கோபியோ அமைப்பின் இலங்கைக்கான தலைவர் குமார் நடேசன் வலியுறுத்தியுள்ளார்.மேலும் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டு கால வரலாறு என்பது மிகப்பெரிய வரலாற்றுத் தடமாகும்.சர்வதேசத்தின் மத்தியில் தேயிலை உற்பத்தியின் ஊடாக இலங்கைக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை இந்திய வம்சாவளி தமிழர்களைச் சாரும்.19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய சந்தையில் இலங்கையின் தேயிலை மிகப்பெரிய அளவில் பிரசித்தமாகியது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று வரை அடிப்படை உரிமைகளுக்காக இவர்கள் போராடி வருகின்றனர்.

ஒருநாட்டில் சமத்துவமான வாழ்க்கை சகலருக்கும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளி மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளான சொந்த நிலத்தில் தனிவீடு,தொழில் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.இது தொடர்பில் அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும்.அதேநேரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள கம்பனிகள் தொழிலாளர்களை சுயமரியாதையுடன் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.தோட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டல்களை பயிற்சிகள் வாயிலாக புகுத்துவதன் ஊடாக தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும்.

தனித்துவம் மிக்க சமூகம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10 பேர்ச் நிலத்தில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அவ்வாறு முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் வைத்தியசாலை, பாடசாலை, விளையாட்டு மைதானம், நீர்ப்பாசனம், தபால் நிலையம் மற்றும் வீதிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு சூழலில் அமைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.அதேநேரம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்பவற்றில் அதிக அக்கறை கொண்டு பெருந்தோட்டத் துறைவாழ் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அனைவரும் வழிசமைக்க வேண்டும் என்றும் குமார் நடேசன் மேலும் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை இலங்கையில்  ஒரு தனித்துவம் மிக்க சமூகமாக, நாட்டின் தேசிய வருவாயில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டவர்களாக இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் விளங்குகின்றார்கள்.எனவே இலங்கை அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்கள், பேரவைகளில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக இடம்பெற வேண்டுமென சமத்துவம் மற்றும் உள்ளடக்கமான வளர்ச்சியை நோக்கிய நகர்வு ‘இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் 200 வருடங்கள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இம்மாநாடு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மலையக மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அநேகமுள்ளன.தொழில்வாய்ப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளும் அநேகமாகும்.இவற்றிலிருந்தும் இவர்கள் விடுபட்டு தேசிய நீரோட்டத்தில் சங்கமிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.இதனை காலம் தாழ்த்தாது உடனடியாக மேற்கொள்ளுதலும் வேண்டும்.எனினும் இது தொடர்பான முன்னெடுப்புக்கள் திருப்திகரமானதாக இல்லை.அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும்,தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இம்மக்களின் வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன.எனினும் இது குறித்த சாதக விளைவுகள் குறைவாகவே இருந்து வருகின்றன.

இதேவேளை ஏற்கனவே மலையக மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் என்றெல்லாம் திட்ட முன்வைப்புக்கள் இடம்பெற்றன.எனினும் காலப்போக்கில் இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டு, ஏட்டுச்சுரைக்காயாகிப் போனது கடந்தகால வரலாறாகவுள்ளது.இத்திட்டங்களை அமுல்படுத்தும் நோக்கில் அரசியல்வாதிகள் வழங்கிய அழுத்தங்களும் செல்லாக்காசாகிப் போனதையே அவதானிக்க முடிந்தது.ஆட்சியாளர்கள் அவ்வப்போது தமக்கென ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டவரலாறுகளுக்கு குறைவில்லை.

இது இப்போதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது.இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பல சந்தர்ப்பங்களிலே பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்கள்.இதய சுத்தியுடன் செயற்படும் இம்மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதென்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

இதனிடையே மலையக மக்களின் பொது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘மலையக தசாப்தம் ‘ எனப்படும் பத்து வருட பல்நோக்கு கிராம மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கின்றார்.காலனித்துவ ஆட்சியின்போது ஏற்பட்ட பின்னடைவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மலையக பிரதேசங்களில் பொது உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை.மலையக பிரதேசங்களில் பெரும்பான்மையினராக தமிழர்கள் வாழுகின்றனர்.

வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார அபிவிருத்தி, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை ஒன்றிணைத்து மேற்கொள்வதன் மூலம் அப்பிரதேச மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொள்வது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கம் 2024 க்கான வரவு செலவு திட்டத்தில் மலையக தசாப்தத்தின் பத்தாண்டு பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்துக்காக 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலக பிரிவுகளில் மலையக தசாப்தம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.அமைச்சரவை அங்கீகாரத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களுக்கு திட்டத்தேர்வு அளவுகோள் மற்றும் செயற்பாட்டு மாதிரி குறித்து தெரிவிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்துக்கான பிரதேச மற்றும் மாவட்ட குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்தவுடன், மாவட்ட செயலாளர்களின் பூரண ஈடுபாட்டுடனும் ஏனைய அரச நிறுவனங்களுடனும் மற்றும் பிரதேச அலுவலகத்தின் பூரண ஆதரவுடனும் கூட்டு வேலைத்திட்டமாக இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று அரசதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.இந்த வருடம் தேர்தல் காலம் என்ற நிலையில் இந்த வாக்குறுதிகள் தேர்தலை மையப்படுத்திய வாக்குறுதிகளாக இருப்பதற்கும் அதிகளவில் சாத்தியமுள்ளது.

எது எவ்வாறானபோதும் நாட்டிற்கு முதுகெழும்பாய் விளங்கும் மலையக சமூகத்தினரை கிள்ளுக் கீரையாக நினைப்பதோ அல்லது அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்காது தொடர்ந்தும் அச்சமூகத்தை ஏமாற்றுவதோ ஒரு பிழையான அணுகுமுறையாகும்.இது பாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.எனவே இதனைவிடுத்து  அம்மக்களுக்கு தேவையான உரிமைகளை உரியவாறு வழங்குவதற்கு ஆட்சியாளர்கள்  முன்வர வேண்டும்.இதேவேளை மலையக அரசியல்வாதிகளின் பொதுநோக்கை மையப்படுத்திய ஒன்றிணைந்த அழுத்தம் சாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாகும் என்பதையும் மறந்துவிடலாகாது.