பூகோள அரசியலில் சிக்கியுள்ள மக்கள் சக்தியும், தமிழரசுக் கட்சியும்

இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடுகள் வரலாற்று ரீதியாக இருந்துவருகின்ற ஒரு பிரச்சனை. 1987களில் இலங்கை இந்திய உடன்பாட்டை அன்றைய இலங்கை அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்தால் அதனை சிறீமாவோ பண்டாரநாயக்காவை அரச தலைவராக்குவோம் என ஜே.என் டிக்சிற் மிரட்டும் இளவுக்கு இலங்கைiயின் அரசியலை இந்தியா கையாண்டு வந்திருந்தது.

அதன் பின்னர் இலங்கை இந்திய உடன்பாடு தோல்வி கண்டதும், உலகில் பனிப்போர் முடிவக்கு வந்ததும் இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடுகளை குறைத்திருந்தாலும் அதன் பின்னர் மீண்டும் சீனாவின் வளர்ச்சி, ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் என்பன இந்தியாவை மீண்டும் இலங்கை விவகாரத்தில் தலையிட தூண்டியுள்ளது.

அமைதியாக இருந்த அமெரிக்காவும் 2007 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவுடன் நெருக்கத்தைப் பேணி தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் உதவி படைத்துறை உடன்பாடு ஒன்றை எட்டியது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவும் தமிழ் மக்கள் மீதான தனது செயற்பாடுகளை முன்நகர்த்தி இலங்கையை தனது கைக்குள் கொண்டுவருவதற்கு முயன்றது. மகிந்த ராஜபக்சாவை தனது கைக்குள் கொண்டுவந்து அமெரிக்காவின் உடன்பாட்டை முறியடிப்பதற்கு இந்தியா முயன்ற சமயம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழத்தி தனது உடன்பாட்டை மேலும் 10 வருடங்களுக்கு 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது.

அதன் பின்னர் மிலேனியம் சலஞ் என்ற  அடுத்த கட்டம் நோக்கி அமெரிக்கா நகரும்போது இந்தியா இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை கொண்டுவந்திரந்தது. ஆனால் அந்த ஆட்சி மாற்றம் 2022 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவினால் மாற்றப்பட்டது.

இப்போது மீண்டும் ஒரு தேர்தல் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த இரு நாடுகளும் இலங்கையின் அரசியலை கையகப்படுத்த முற்பட்டு நிற்கின்றன. அரகலிய போராட்டத்தின் ஆரம்பத்தில் ஜே.வி.பி எனப்படும் பெலவத்தையில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்று அதன் தலைவர் அனுரகுமர திஸநாயக்காவை சந்தித்த அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவது ஜீலி சாங் கடந்த ஒக்டோபர் மாதமும் மீண்டும் அங்கு சென்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து நவம்பர் மாதம் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயும் அங்கு சென்றிருந்தார். அமெரிக்காவின் அசைவுகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா இலங்கை விடையத்தில் அமெரிக்காவை முறியடிப்பதில் தீவிரமாகவே உள்ளது.

அதன் பின்னர் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் அனைத்துலக நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் திஸநாயக்காவை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் உடனடியாகவே இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஸ் ஜா திஸாநாயக்காவை சந்தித்திருந்தார். அவர் சந்தித்த சில நாட்களில் ஜேர்மனின் தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரை சந்தித்திருந்தார்.

அதன் பின்னர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட திஸநாயக்காவை இந்திய வெளிவிவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் சந்தித்தது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் மட்டுமல்ல இலங்கை நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி பலமான சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துலக மட்டத்தில் எழுந்துள்ளதையே இது காட்டுகின்றது.

ஆனால் இலங்கை அரசை தம்வசப்படுத்த போட்டிபோடும் இரு தரப்பில் ஒரு தரப்பே வெற்றிகொள்ள முடியும். அவ்வாறு ஏற்பட்டால் மறுதரப்பின் தெரிவாக என்ன இருக்கும் என்பது தான் கேள்வி. அதாவது மறுதரப்பு தனது வெற்றிடத்தை எவ்வாறு ஈடுசெய்யும்?

இந்த நிலையில் தான் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசலும் இந்த பூகோள அரசியலின் வெளிப்பாடா என்ற கேள்விகளும் எழாமலில்லை.