எதிர்த்தாக்குதலை நடத்துவதற்கு பாலஸ்தீனியர்களுக்கே அதிக அதிகாரம் உள்ளது – சீனா

பாலஸ்தீன மக்களுக்கான நீதி மறுக்கப்படக்கூடாது என நெதர்லாந்தின் ஹெக் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்ற விசாரணையில் பேசிய சீனாவின் பிரதிநிதி தெரிவத்துள்ளார்.

நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் ஆனால் அது மறுக்கப்படக்கூடாது என சீனாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர்  மா சின்மின் கடந்த வியாழக்கிழமை(22) தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் இறைமைய மீறி அவர்களின் இடத்தில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி 56 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இந்த சட்டவிரேத ஆக்கிரமிப்பின் நிலை இன்றும் மாறவில்லை.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கோரவேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் றிச்சார்ட் விசேக் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தை கடந்த புதன்கிழமை(21) கேட்டுக்கொட்டதற்கு பதிலடியாகவே சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஒரு அன்னிய நாடு அது ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும்போது தற்பாதுகாப்புக்காக பாலஸ்தீனயர்களுக்கு போராடுவதற்கு இஸ்ரேலைவிட அதிக அதிகாரம் உண்டு என சின்மின் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சட்டங்களின் அடிப்படை விதிகள் அனைத்தையும் இஸ்ரேல் மீறியுள்ளது என அயர்லாந்தின் பிரதிநிதி பேசும்போது தெரிவித்திருந்தார்.

இரு நாடுகள் என்ற தீர்வு தான் இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ்வதற்கான ஒரே தீர்வு என தாம் கருதுவதாக யப்பானின் வெளிவிவகார அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர் ரொமகிரோ மிகாநகி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் சுயாட்சி அதிகாரத்துடன் வாழ்வதுடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் இதுவே நிரந்தர தீர்வுக்கான வழி என ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சகத்தின் சட்ட ஆலோசகர் மைக்கேல் வூட் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பில் 50 நாடுகளின் கருத்துக்களை அனைத்துலக நீதிமன்றம் கேட்டு வருகின்றது. இது இஸ்ரேலின் கொள்கைகள் தொடர்பில் அனைத்துலக நிபுணர்களின் கருத்துக்களை பாலஸ்தீன மக்கள் அறிந்துகொள்வதற்கு வழிஏற்படுத்தும்.

பாலஸ்தீன பகுதிகளில் இடம்பெற்றுள்ள இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கள் சட்டவிரேதமானவை என்பதை நீதிபதிகள் அறிவிக்க வேண்டும் அப்போது தான் இரு நாடுகள் என்ற தீர்வு சாத்தியமாகும் என பாலஸ்தீனம் அனைத்துலக நீதிமன்றத்தை இந்த வாரம் கேட்டுள்ளது.

மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையிலான மேதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

இந்த விசாரணைகளில்  இஸ்ரேல் நேரிடையாக பங்குபற்றாதபோதும் நீதிமன்றத்தின் தலையீடு குடியேற்றங்கள் தொடர்பிலான பேச்சக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பிலான தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றத்திற்கு ஆறு மாதங்கள் செல்லலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.