மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா

மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து  மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது வட கொரியா. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமான கட்டுகதை. எங்கள் அரசின் பிரதான எதிரியால் திட்டமிடப்பட்ட சதி.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும்“ என்றுள்ளர்.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.