மலேசியாவுக்குள் செல்ல முயன்ற அகதிகள் கைது

இந்தோனேசியாவின் Lhokseumawe Aceh அகதிகள் முகாமில் தங்கியிருந்த 8 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மலாக்கா நீர்சந்தி வழியாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைதான அகதிகள் மலேசியாவில் உள்ள தங்களது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கு செல்ல முயன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் உயிர் அச்சுறுத்தலை சந்தித்துவரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள், பல ஆண்டுகளாக அந்நாட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ரோஹிங்கியா முஸ்லீம்களை குறிவைக்கும் வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ என முன்பு குறிப்பிட்டிருந்தது.

இன்றைய நிலையில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.