‘பழிவாங்கல் கைதில் இருந்துவிடுதலை பெற்றேன்’-தவிசாளர் நிரோஷ்

அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ் இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தன்னை பொலிஸார் கைது செய்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டே இருக்கின்றனர். அப்படியிருக்க எமது சபையினால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி வளம் போதாது என்பது சகலரும் அறிந்த விடயம்.

இந் நிலையில் எமது பகுதிகளுக்கு அற்பசொற்பமான அபிவிருத்திகளே தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்றன. வழங்குகின்ற அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின்ற உள்ளுராட்சி மன்றகளின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக்கூடாது.

இதனை நான் வலியுறுத்துகையில் ஜனநாயக ரீதியிலான அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில் என் மீது அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் கட்டவீழ்த்து விடப்படுகின்றன.

எமக்கு எதிராக அரச திணைக்களங்களை அழுத்தங்களைப் பிரயோகித்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. பொலிஸார் என்னைக் கைது அலுவலகம், நான் செல்லும் இடங்களுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றால் அது உயர்மட்ட அரசியல் அழுத்த்தின் விளைவே ஆகும். நான் பொலிஸார் பொற்ற வாக்குமூலங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினேன். கைது முயற்சி அரசியல்பழிவாங்கள் என்றபோதே நான் நீதிமன்றை நாடினேன்.  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் தொலைபேசிவாயிலாக அறிவித்தேன். அரசியல் பழிவாங்கல் இடம்பெறும் என்றால் பாதுகாப்புப் பெறுவது எனது உரிமை.

இந்நிலையில் நான் நீதிமன்றின் உதவியினை நாடி எனக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டுள்ளேன். நீதிமன்றம் எமது முன்பிணை மனுவை அராய்ந்து முன்பிணை அளித்துள்ளது.

நாட்டின் பிரஜை எனற வகையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கும் நீதிமன்றின் கட்டளைகளை மதிக்கின்றேன். நான் பழிவாங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்ற நிலையில் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.

இதேவேளை எனது கருத்திற்கு எதிராக திரண்ட மற்றும் ஒத்துழைத்த   தமிழ் அரசியல் தலைவர்கள், வழக்கினை முன்கொண்டு சென்ற சட்டத்தரணிகள், தகவல்களை வெளிப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.