அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை

அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 300 மில்லியன் டொலர் (இலங்கை ரூபா 2,210கோடி) மதிப்புள்ள, இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சீன நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. இலங்கை பெய்ஜிங்கிடமிருந்து வாங்கிய  1.4 பில்லியன் டொலர் கடனைக் கட்டத் தவறிய காரணத்தினாலேயே இங்கு சீனா டயர் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.

ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தாராளமான வரிச் சலுகைகளை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் டயர் தொழிற்சாலையை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

சாண்டோங் ஹஹுவா டயர் நிறுவனம் குறைந்தபட்சம் 80% உற்பத்தியை ஏற்றுமதி செய்யும். மீதமுள்ளவற்றை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டின் 2021 வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்ட சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொழும்பில் ஒரு பெரிய சீனக் கட்டுமானப் பணி நிறுவனம், அபிவிருத்திக்கும், அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் நிதியை அறிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தில் 2014இல் தொடங்கிய 1.4 பில்லியன் டொலர் நில மீட்புத் திட்டம் இலங்கையின் தற்போதைய நிதி அளவை இரட்டிப்பாக்கியுள்ளது.

ராஜபக்ச 2005 – 15 ஆண்டுகளுக்கிடையில் ஜனாதிபதியாக இருந்த பொழுது கொழும்பு சீனாவிடமிருந்து பில்லியன் கணக்கான தொகையை கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.