மக்களை மீட்க பஸிலுடன் நானும் இரு ஆயர்களும் வன்னி செல்ல தீர்மானித்திருந்தோம் – கஜன்

“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம். மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது”

இவ்வாறு இறுதிப்போரின் போது இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சபையில் முழுமையாக விவரித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்-

“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களுடன் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் பேசினேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம்.

மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்றுபொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடல் மார்க்கமாக அவர்களை மீட்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தால் அது தாமதமானது.

பின்னர், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அரசினால் அறிவிப்பு விடப்பட்டது.

அதனை கேட்டுநான் அச்சப்பட்டேன். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப் படியேனும் வெளியேற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப் பிரச்னை ஒன்றை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர –

“நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களைப் பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களை காப்பாற்றினோம்” என்றார்,

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார்.

மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த கஜேந்திரகுமார்? “போராட்டம் தொடங்கியவேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால் 17 ஆயிரம் பொதுமக்களே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தது என அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே இலக்கங்களில் அரசு பொய்களை கூறிக் கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164 ஆயிரம் மக்களை அரசு கணக்கில் எடுக்கப்படவில்லை.

54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீஸா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீஸா வழங்கவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்கவேண்டும். ஆனால் அவர்கள் குற்றவாளிகள். அதனால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்படவேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சுக்கு பொறுப்பான சரத்வீரசேகர சற்று முன்னர் இந்தச் சபையில் ஒன்றை கூறினார். தமிழ் தேசியக் கூட்ட மைப்பை தடை செய்யவேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல் மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் அவர் ஒன்றைக் கூறினார். பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளை அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம்.

இதுதான் போர் குற்றம். ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சம்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே போர் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு-கிழக்கிலேயே உள்ளன. இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களது நிலைப்பாடாகும். விடுதலைப்புலிகளின் பெயரை க்கூறி தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்.

தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே நாளை உங்கள் இனத்திற்கு எதிராகவும் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறிப் பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார்.

சரத் வீரகேகர :- இவர் முழுமையாகப் பொய்களை கூறிகின்றார். புலம்பெயர் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பெசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களை பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்கவேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களை தடை செய்யவேண்டும் என்பது சரியானது” என்றார்.

கஜேந்திரக்குமார் எம்.பி:- நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பியின் உரையில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்கவேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார்.

இதனை அடுத்து சபையில் சிங்களஎம்.பிக்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டது. பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் கஜேந்திரகுமார் எம்.பியை விமர்சித்தனர்.