போர் முடிவடைந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் – அமைச்சர் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த பின்னர் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

“தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு. மகிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று அழிவாக மாறியுள்ளது. ஜேர்மனியின் ஹிட்லர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவரது அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது.

உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை நாம் தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாததன் காரணமாக அவர்கள் இன்று இத்தைகய கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

நாம் செய்தது தவறாகும், நாம் செய்த தவறை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய கருத்தினை வெளியிடுவார்கள் என்றால் அவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர். நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக அவர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்” என தெரிவித்துள்ளார்.