போர்க்குற்ற விசாரணைகளில் அதிக கவனம் செலுத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்

கடந்த ஆண்டை விட அதிகளவிலான நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய நாடுகள் சபை 2020 ஆம் ஆண்டுக்கு மெற்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் வருடங்களில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற பொதுச்சபையின் கூட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான நிதியாக ஏறத்தாள 3 பில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்களை விட சற்று அதிகமாகும்.

இந்த நிதியில் முதல் தடைவையாக மியான்மார் மற்றும் சிரியா ஆகிய  நாடுகளில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நிதியும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யேமன் கெயிட்டி பகுதிகளில் இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான நடவடிக்கைக் குழுக்களையும் அமைப்பதற்கு ஐ.நா தீர்மானித்துள்ளது.

சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெற்றுவரும் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலும், 2017 ஆம் ஆண்டு மியன்மாரில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு ஏதுவாக ஐ.நா இந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.

ஐ.நாவின் இந்த திட்டத்தில் ரஸ்யா பல பரிந்துரைகளை கொண்டுவந்ததுடன், ரஸ்யா, மியான்மார், சிரியா ஆகிய நாடுகளும், அவர்களின் கூட்டணி நாடுகளான வடகொரியா, ஈரான், நிக்கரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் ஐ.நாவின் இந்த நீதி ஒதுக்கீடு தொடர்பில் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தன.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதி இன்றி இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரியா குற்றம் சுமத்தியுள்ளது.