பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதம் – தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு கண்காணிப்பு அமைப்பு ( Multi Dimensioal Monitoring Agency ) அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என தமிழக அரசுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகலை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவைப் பேரறிவாளனின் விடுதலை வழக்குடன் இணைந்த விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.