மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு 6 மாதங்கள் தேவை – அமைச்சர் பீரிஸ்

“தேர்தல் முறை என்ன என்பதை முடிவுசெய்து சட்டத்தை வரைந்து நாடாளுமன்றத்தில் சமர்பித்து அதனை நிறைவேற்றப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நாடளாவிய ரீதியில் நடத்தமுடியும். இன்னும் ஆறு மாதங்களிற்குள் இதுதொடர்பிலான செயற்பாடுகளை பூரணப்படுத்த முடியும்.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒன்றுதான் புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகளாகும். 43 வருடங்களுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பே இன்றும் அமுலில் உள்ளது. 4 தசாப்த காலங்களில் இலங்கை சமூகம் பரந்தளவில் மாற்றமடைந்துள்ளது. அதனால் அரசியலமைப்பின் தொகுதிகளை அல்ல, ஒட்டுமொத்த யாப்பினையும் ஆழமாக ஆராய்ந்து பூரணமாக அரசியலமைப்பினை உருவாக்குவது தற்காலத்தேவை என்பதை அறிகின்றோம்.

அதனால்தான் முதற்கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. ஜுலை மாதத்திற்கு முன்னதாக நிபுணர் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திற்கு கையளிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, தேர்தல் சட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

புதிய தேர்தல் முறையன்றி தேர்தலை நடத்தமுடியாது. இந்த இடைவெளியை பூரணப்படுத்தாமல் தேர்தலை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால் புதிய முறை அவசியமாகின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், அமைச்சரவையில் பல மாற்றுவழிகளை சமர்பித்த நிலையில் கொள்கை ரீதியிலான தீர்மானம் ஒன்றை அமைச்சரவைக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூடி மேற்கொள்ளவேண்டும்.

எல்லை நிர்ணயக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அதன் செயற்பாடுகளுக்காக 03, 02 மாதங்களாகும். தேர்தல் முறை என்ன என்பதை முடிவுசெய்து சட்டத்தை வரைந்து நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நாடளாவிய ரீதியில் நடத்தமுடியும். இன்னும் 06 மாதங்களிற்குள் இது தொடர்பிலான செயற்பாடுகளை பூரணப்படுத்த முடியும்.”