நீலகாமம் சம்பவம்: மலையகத்தின் காணி உரிமைப் போராட்டமும் அதிகார அராஜகமும் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான குடியிருப்பும் இன்னும் முழுமையாக கிடைக்காத துயரமான உண்மை மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது.  இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை நீலகாமம் பெருந்தோட்டத்தில் நிகழ்ந்த அண்மைய சம்பவம், இந்த நீண்டகால அநீதியின் மற்றொரு வெளிப்பாடாகக் கருதப்பட வேண்டும்.
குறித்த தோட்டத்தில் உள்ள வீடற்ற பொதுமகன் ஒருவர் தற்காலிக குடியிருப்பு அமைத்ததாக கூறப்படும் சூழலில், அந்த வீட்டை அகற்ற முற்பட்டபோது மோதல் ஏற்பட்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் போது நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வீடு அமைத்த நபர் கைது செய்யப் பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. ஆனால் இதே சம்பவத்தை அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் பார்வையில் பார்க்கும் போது, இது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல என்றும் இது காணியற்ற மக்களின் வாழ்வுரிமையை ஒடுக்க முயலும் அதிகாரமிக்க அமைப்புகளின் தாக்குதல் எனும் தீவிரமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறுகி றது என்றும் தெளிவாகிறது.
மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் தேயிலை பொருளாதாரத்தை தலைமுறைகளாக தாங்கி நிற்கும் சமூகமாக இருந்தும், அவர்கள் வாழும் நிலத்தின் உரிமையாளர்களாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. பல குடும்பங்கள் இன்னும் “லயன் அறைகள்” என்ற நெருக்கமான பழைய தொழிலாளர் குடியிருப்புகளில் வாழ்கின்றன. தனி காணி இல்லை.
தனி வீடு அமைக்கும் வாய்ப்பு இல்லை. குடும்பங் கள் பெருகினாலும் வாழ்விடம் பெருகவில்லை. ஒரு குடும்பத்தில் பெற்றோர், திரு மணமான பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என மூன்று தலைமுறைகள் கூட ஒரே குறுகிய குடியிருப்பில் வாழும் நிலை இன்றும் கூட காணப்படுகிறது. இந்நிலையில், பயன்படுத்தப்படாத தரிசு காணிகளில் தற்கா லிக குடியிருப்பு அமைக்க மக்கள் முயல்வது சட்ட விரோத செயல் என்ற பெயரில் தடுக்கப்படுவது நீதியல்ல.
அது மனித வாழ்வின் அடிப்படைத் தேவையை மறுப்பதாகும். நீலகாமம் சம்பவமும் இதே சமூக உண்மையை வெளிப்படுத்துகிறது. வீடற்ற ஒருவர் தற்காலிக குடியிருப்பு அமைத்துள்ளார். அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் ஏன் அவர் அப்படி ஒரு முயற்சி செய்தார்? அவருக்கு அரசு வீடு கொடுத்ததா? காணி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? மாற்று வசதி வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளே முக்கியமானவை.
சட்டம் யாருக்காக? அதிகாரம் யாரிடம்?
குறித்த நபர் தற்காலிக குடியிருப்பை அமைத்த பின்னர் தோட்ட நிர்வாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்  விசாரணைக்கு செல்லும் முன்பே இரு தரப்பினரிடையே மோதல் ஏற் பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும், குறித்த தோட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவிக்கப்படும் தனியார் பாதுகாப்பு பிரிவினராலேயே தற்காலிக வீடு சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஒரு குடியிருப்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தாலும், அதை அகற்றும் அதிகாரம் தனியார் பாதுகாப்புக் குழுவிற்கு உள்ளதா? நீதிமன்ற உத்தரவு இன்றி, சட்டப்படி அறிவிப்பு இன்றி, குடியிருப்பை உடைத்துத் தரைமட்டமாக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வாறு நடந்திருந்தால், அது சட்டத் தின் மீதான திறந்த மீறலாகும்.
சில பெருந்தோட்டங்களில் நிர்வாகம் தன்னிச் சையான அதிகார அமைப்பாக இயங்குகிறது. மக்கள் குடிமக்களாக அல்லாது கட்டுப்படுத்த வேண்டிய தொழிலாளர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இதுவே காலனித்துவ மனப்பான்மை தொடர்வதாகும். குறிப்பாக காவல்துறையினரின் நடவடிக்கையால் தற்காலிக இருப்பிடத்தை அமைத்த நபரே கைது செய்யப்பட்டார். எனினும் குறித்த நபரை தாக்கி தற்காலிக குடியிருப்பை தரைமட்டமாக்கிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து இதுவரையில் தெளிவான தரவுகள் வெளிப்படுத் தப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடந்த ஆட்சி களிலும் இதுபோன்ற அராஜகங்களை தாம் நேரில் சென்று தடுத்ததாகவும், இப்போது ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது சமூக வலைத்தள பதிவில் பயன்படுத்திய “ஹெல்மெட் குண்டர்கள்” என்ற சொல், தோட்ட நிர்வாகங்களின் பெயரில் செயல்படும் முகமூடி வன்முறை அணிகளை சுட்டிக்காட்டுகிறது. அவர் மேலும், “இராணுவத்தில் இருந்து ஓடி வந்தவர்களை கொண்டு தோட்ட நிர்வாகங்கள் குண்டர் படை அமைக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்தை வெறும் அரசியல் கோஷமாக பார்க்க முடியாது. இந்த சம்பவம் மலையகத்தில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஒரு அச்சத்தை வெளிப்படுத்துகிறது. சில தோட்டங்களில் முன்னாள் ஆயுதப் பயிற்சி பெற்ற வர்களையோ, வன்முறைக்கு பழகியவர்களையோ பாது காப்பு பணியாளர்களாக அமர்த்தி மக்களை அச்சுறுத்தும் கலாசாரம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையெனில், அது தேசிய பாதுகாப்பு மட்டத்திலான விசாரணைக்கு உரியது. தனியார் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுத மனப்பான்மை கொண்ட குழுக்கள் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட முடியாது. இச்சம்பவத்தில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் தோட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருபுறம், அரசியல் தலையீடு இல்லையெனில் பல மலையகப் பிரச்சினைகள் அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் புதைந்து போகும். காவல்துறை நடவடிக்கை மந்தமாகும். நிர்வாகம் மக்களின் குரலை புறக்கணிக்கும். எனவே, மக்க ளின் சார்பாக அரசியல்வாதிகள் தலையிடுவது அவசிய மான ஒன்றாக உள்ளது.
மறுபுறம், ஒவ்வொரு மனித உரிமை மீறலுக்கும் அரசியல்வாதி அழுத்தம் தேவைப்படும் நிலைமை இருந்தால், அதுவே நிர்வாகத் தோல்வியின் அடையாளமாகும். சட்டம் தானாக இயங்க வேண்டும். ஒரு ஏழை தொழிலாளியின் வீடு உடைக்கப்பட்டால், அமைச்சர் அழைத்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படுவது ஜனநாயகத்தின் வெற்றியாக கருத முடியாது.
இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்வைத்த இரண்டு முக்கிய கோரிக்கைகள் மலையக எதிர்கால அரசியலின் மையமாக மாறக்கூடியவையாகும். தோட்டங்க ளில் தரிசு காணிகளில் வீடற்றோருக்கு குடியிருப்புகள் அமைக்க உரிமை வழங்க வேண்டும் என்றும் முன்னாள் இராணுவத்தினர் அல்லது வன்முறைப் பின்னணி கொண்டவர்களை கொண்டு தனியார் குண்டர் படைகள் அமைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரண்டு கோரிக்கைகளும் அடிப்படை மனித உரிமை மற்றும் பாதுகாப்பு கோரிக்கைகளாகும். காணி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. பாதுகாப்பு இல்லா மல் சமூக அமைதி உருவாகாது. காணி உரிமை என்பது வெறும் நிலப்பரப்பு உரிமை மாத்திரமின்றி அது நிரந்தர குடியிருப்பு உரிமையாகும். எனவே மலையக அபிவிருத்தி குறித்து பேசும் எந்த அரசாங்கமும் முதலில் காணி உரிமை சட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்.
நீலகாமம் சம்பவம் – ஒரு குறியீடு
இந்தச் சம்பவம் ஒரு வீட்டை உடைத்தது பற்றியது மட்டும் அல்ல. அது வீடற்ற மக்களின் அவல நிலையை வெளிக்காட்டுகிறது. காணியற்ற தொழிலாளர் சமூகத்தின் துயரம், நிர்வாக அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வன்முறை அணிகளின் அச்சுறுத்தல் என்பவற்றை யும் காட்டுகிறது. மலையக மக்கள் இலங்கையின் பொரு ளாதாரத்தை கட்டியெழுப்பியவர்கள். ஆனால் அவர்கள் இன்னும் தமது மண்ணில் உரிமையற்றவர்களாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நீலகாமம் சம்பவம் போன்றவை நிகழும் வரை, “அபிவிருத்தி”, “ஒற்றுமை”, “நவீன நாடு” போன்ற சொற்கள் வெறும் அரசியல் விளம்பரங்களாகவே இருக்கும். மலையகத்தில் உண்மை யான மாற்றம் வேண்டும் என்றால். காணி உரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் குண்டர் படைகள் கலைக் கப்பட்டு, சட்டம் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும். அப் போதுதான் ஆட்சி மாறியதோடு காட்சியும் மாறியது என்று மக்கள் உணர்வார்கள்.