புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளம் குறித்த விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்துள்ள வினாவும்- பி.மாணிக்கவாசகம்

இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை வரைபை முற்றாக்குகையில்  காரசாரமான நிலைமகள் எழுந்திருக்கின்றன. அண்மையில் வெளியாகிய அதன் ஆரம்ப வரைபு தமிழ்த்தரப்பை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்ததைக் காண முடிந்தது. ஆயினும் அந்த வரைபை அப்படியே ஏற்றுக்கொள்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வடிவில் தெரிவித்திருந்தார்.

கடுஞ்சொற்களையும், கடும் குற்றச்சாட்டுக்களையும் கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன மனித உரிமைப் பேரவையில் தமது இணங்கி வராத கடும் போக்கிலான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அந்தக் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலும் சம்பந்தனின் அறிக்கை அமைந்திருந்தது.

ஆனால் சம்பந்தனைத் தவிர அனைத்துத் தமிழ்த்தரப்பினரும் ஐ.நா மனித உரிமைப் பேரவைப் பிரேரணையின் வரைபை நிராகரித்திருக்கின்றனர். மனித உரிமைப் பேரவையில் பிரேரணையை முன்மொழிகின்ற உறுப்பு நாடுகள் தமிழ் மக்களின் நிலைமைகளைப் பிரதிபலிக்காமைக்குக் கடும் கண்டனங்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து சம்பந்தனின் அறிக்கை வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அந்த அறிக்கை பற்றிய விபரங்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும். அதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அந்தக் கட்சியின் பேச்சாளரும் ஊடகங்களிடம் மறுத்துரைத்திருந்தனர். அவர்களுடைய கூற்று ஐ.நா பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

களத்திலும் புலத்திலும் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அமைப்புக்களும் தமிழ்த்தரப்பு சக்திகளும் ஐ.நாவின் வரைபு நிலையிலான பிரேரணையை நிராகரித்திருந்தன. தமிழ் மக்களின் நீதி கோரலுக்கான குரலை உள்ளடக்காத அந்தப் பிரேரணையை உருவாக்கிய நாடுகளைக் கண்டித்திருக்கின்றன. அவற்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஒன்று.

“சிறீலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும்  அமைகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கை கூறி இருக்கின்றது.

நமது ஈழ நாடு | செய்திகள் | Page 3

அத்துடன் “அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது” என்றும், “புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது” என அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது.

“எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்ப”தாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கை, “அத்தோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்னராக தீர்மான வரைபில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம்’” என்றும் கூறி இருக்கின்றது.

ஆனால் அந்தத் தீவிரமான செயல் முனைப்புக்கள் என்ன என்பது பற்றிய விபரங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு விடயத்தை – அதுவும் மிக முக்கியமான விடயத்தை – ஏற்றுக்கொண்டிருப்பதை அதன் அறிக்கையில் காண முடிகின்றது.

அரசுகள் அரசற்ற இனங்கள் சந்திக்கின்ற சவால்கள், இன்னல்களை சரியான முறையில் உணர்ந்து கொள்வதில்லை. அவற்றை அரசுகள் பிரதிபலிப்பதில்லை என்ற நடைமுறை பூகோள அரசியலின் யதார்த்த நிலைமையை அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

Bachelet 1120x680 1 புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளம் குறித்த விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்துள்ள வினாவும்- பி.மாணிக்கவாசகம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணைகளையும் அவற்றின்  பரிந்துரைகளையும் சம்பந்தப்பட்ட அரசுகள் கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டும் என்று கோருவதுடன் நின்று விடுகின்றது. இதுவே தமிழ் மக்களின் யுத்தத்திற்குப் பின்னரான கடந்த 12 வருட காலப் பட்டறிவாக இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற பெருந்தேசிய அரசியல் சக்திகளும், பேரினவாத அரசியல் போக்கைக்கொண்ட அந்த அரசுகளின் தலைவர்களும் பொறுப்பு கூறும் விடயத்தை இழுத்தடித்து இழுத்தடித்து இறுதியில் அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற தந்திரோபாயத்தையே பின்பற்றி வருகின்றனர்.

இலங்கையின் இந்த ஏமாற்று அரசியல் போக்கை, அதற்கே உரிய பொறுப்பற்ற நேர் முரணான நிலைப்பாட்டைத் தகர்த்தெறிவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினாலும் முடியவில்லை. ஐ.நா மனித உரிமைப் பேரவையினாலும் முடியவில்லை. ஐ.நாவும் இது விடயத்தில் கையாலாகாத ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு சர்வதேச அரசியலும், மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடையே காணப்படுகின்ற பிராந்திய வல்லாண்மைப் போட்டி நிலைமையுமே முக்கிய காரணமாகும். மனித உரிமைப் பேரவையில் உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகள் மற்றொரு நாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் உணர்ச்சி நிலையிலான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தக்கவகையில் செயற்படத்தக்க செயற்திறனற்றவை என்றே கூற வேண்டும்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகள் வெற்றி வெற்றி என்ற நிலைப்பாட்டின் கட்டமைப்பக்குள்ளேயே நிறைவேற்றப்படுகின்றன. பேரவையில் கொண்டு வரப்படுகின்ற ஒரு பிரேரணை மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டுவதாகவும், கண்டிப்பதாகவும் அமைந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட ஒரு நாட்டை முழுமையாகக் கைகழுவி விடுகின்ற தன்மையைக் கொண்டிருப்பதில்லை. உறுப்பு நாடுகள் என்ற வகையில் ஒரு நாட்டுக்கு எதிராக முழு அளவிலான எதிர் நிலைப்பாட்டை அந்தப் பேரவை ஒருபோதும் எடுக்கத் துணிவதில்லை. கண்டனங்களைக் கொண்டதாகவும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கொண்டதாகவுமே அதன் பிரேரணைகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் மனித உரிமைப் பேரவையும் இத்தகைய ஒரு வரையறைக்குள்ளேதான் கட்டுப்பட்டுச் செயற்பட முடியும். ஏனெனில் அதற்கும் அப்பால் சென்று பொறுப்பு கூறும் செயற்பாட்டை முன்னெடுக்காத ஓர் உறுப்பு நாட்டுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கத்தக்க வல்லமை ஐ.நாவின் இந்த இரண்டு பொறிமுறைகளுக்கும் இல்லை. இதனை பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒர் உறுப்பு நாட்டுக்கு எதிராக சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கையை எடுப்பதற்கான வல்லமை பாதுகாப்பு சபைக்கே உண்டு. அதுவும் ஐ.நாவின் உறுப்புரிமை பெற்றுள்ள வல்லரசு நாடுகளின் வீட்டோ அதிகாரம் என்ற கட்டுப்பாட்டு நிலைமைக்குள்ளே இந்த வல்லமையும் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படுகின்ற ஒரு தீர்மானத்தை வல்லரசு நாடுகள் இணைந்தும் தனித்தும் வலிதற்றதாக்க முடியும்.

இத்தகைய மிகுந்த கடினமான, முரண்பாடான நிலைமைகளுக்குள்ளேயே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களுக்கான பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டு நிலைமை கட்டுண்டு கிடக்கின்றது. இந்த யதார்த்தத்தை – நடைமுறை நிலைமையை – பாதிக்கப்பட்ட தரப்பினராகிய அரசற்ற இனக்குழுமங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய முரண்பாடான நிலைமை காரணமாகவே மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் இலங்கையின் மிக மோசமான மனித உரிமை நிலைமைகள் மிக மோசமான போர்க்குற்றச் செயற்பாட்டு உண்மைகளைக் கொண்ட கடும் சொற்களிலான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதேவேளை, உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக எத்தகைய பயனுள்ள வகையிலான அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளையும் அவர் முன்மொழித்திருக்கின்றார்.

அவருடைய கூற்றுக்கமைய உறுப்பு நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வெளியில் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நியமங்களுக்கு அமைவான முறையில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்தப் பரிந்துரை பாதிக்கப்பட்டுள்ள தமிழ்த்தரப்புக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள மிக முக்கியமானதொரு வழிகாட்டலாகும். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான ஏக்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும் அறிக்கைகள் வழியாகவும், கண்டனங்களின் வழியாகவும் உணர்த்துவதற்கு அப்பாலும் செயற்பட முடியும். செயற்பட வேண்டும் என்பதை அந்த வழிகாட்டல் இடித்துரைத்திருக்கின்றது என்றே கொள்ள வேண்டும்.

Venezuela, Poland and Sudan amongst 14 new Human Rights Council members | | UN News

மனித உரிமைப் பேரவையில் அரசற்ற மக்கள் கூட்டங்களின் குரல்கள் உரிய அளவில் இடம்பெறுவதில்லை. அல்லது உள்ளடக்கப்படுவதில்லை. இது அரசுகள் சார்ந்த இராஜதந்திர வழிமுறைகளிலான நிலையானதொரு நிலைப்பாடாகும். ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் ஐ.நா மன்றத்தின் எல்லைகளைக் கடந்து, சர்வதேச அரசியல் அரங்கில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் அடங்கிய அரசியல் எல்லைப்பரப்பில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனையே நாடற்ற சனங்களாகிய தமிழ் மக்கள் ‘புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய’ நிலையில் இருப்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.  அது மட்டுமல்லாமல் ‘எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக’ தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்ற அந்த அறிக்கையின் வாசகங்கள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் நீதிகோரிய போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள தளங்களின் எல்லைகளைக் கடந்து புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றதொரு விழிப்புணர்வாக இந்த சுட்டிக்காட்டலைக் கொள்ள வேண்டியது அவசியம்.

அந்தத் தளத்தை நோக்கி தமிழ்த்தரப்பின் களநிலை அரசியலும், புலம்பெயர் தள அரசியலும் எப்போது நகரப் போகின்றன, எப்படி நகரப் போகின்றன என்பது இன்றைய நிலையில் மிக முக்கியமான வினாவாக விசுவரூபம் எடுத்திருக்கின்றது.