புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர், பயங்கரவாத முறியடிப்பு பிரிவினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்து வரும் நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளரையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்று(23) அவரிடம் அழைப்பாணை கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், குறித்த கடிதத்தைக் கையளித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெற வேண்டியிருப்பதனால், புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜனமே ஜெயந்தை வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி, புதிய செயலகக் கட்டிடம், கொழும்பு – 1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு – 1 இன் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர், எதற்காக தான் அழைக்கப்பட்டிருக்கின்றேன் என்பது தொடர்பாக எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் கடந்த மே மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற இனப்படுகொலை நினைவுகூரல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

எனவே இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரனும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளரும் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.