வடக்கு, கிழக்கு இணைப்பை எமது கட்சி எதிர்க்கிறது;இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பில்லை – ரவூப் ஹக்கீம் ரவூப் ஹக்கீம்

எம்முடன் பலரும் புகைப்படம் எடுப்பார்கள். தற்பொழுது செல்பியும் எடுக்கிறார்கள். சஜித், கோட்டாபயவுடனும் செல்பி எடுக்கிறார்கள்.இதனால் நாம் சிக்கலில் விழுகிறோம். ஆயுதம் ஏந்துவதற்கு எதிராகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைப்பை எமது கட்சி எதிர்க்கிறது என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவனுடன் 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தின்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளதுடன் குறித்த வீடியோவை கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்த குழு வொன்று அவரை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது நாம் அறிந்ததே.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் மேலும் கூறுகையில்,

சஜித் பிரேமதாசவுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் இருப்பதாக காண்பித்து என் மீது சேறு பூசும் முயற்சியின் பின்னணியில் யார் இருக்கிறார்? என வெளியிடும் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டை நான் செய்ய மாட்டேன் என்று கூறிய அவர் பொதுஜன பெரமுனவுடன் தொடர்புள்ளவர்கள் அரசியல் இலாபம் பெற பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

நான் பயங்கரவாதிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ததாக வீடியோ ஒன்றையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.வேண்டுமென்றே அரசியல் நோக்கில் எனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த சதி செய்கின்றனர். இதற்கு முன்னரும் நான் பல தெரிவுக்குழுக்களில் பணியாற்றியுள்ளேன்.

ஒருபோதும் என்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிக்கையில் எதனையும் மூடிமறைக்க நான் முயலவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகையில் அரசியல் இலாபம் பெறுவதற்காகவும் மக்களை தூண்டிவிடவும் எனக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேர்தலுக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.எனக்கெதிரான குற்றச்சாட்டினால் முஸ்லிங்களிடையே எனது ஆதரவு கூடியுள்ளது. இந்த போலி குற்றச்சாட்டை முன்வைத்தோரை மக்கள் சபிக்கின்றனர்.இனங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரிக்கவே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக முறைப்பாடு செய்ய மௌலவியின் வீ்ட்டை பொலிஸார் சோதனை செய்த சம்பவத்துடன் எனக்கு தொடர்பு கிடையாது.அவரின் வீட்டிற்கு மேல்மாடியில் இருக்கும் பெண்ணே முறையிட்டுள்ளார். அவரின் மாளிகாவத்தை வீட்டில் என்மீது சேறு பூசும் சுவரொட்டிகள் இருந்துள்ளன. என் மீதான குற்றச்சாட்டினால் அவர்களுக்கு கிடைக்கும் சிறுபான்மை வாக்குகள் குறையும்.

எம்முடன் பலரும் புகைப்படம் எடுப்பார்கள். தற்பொழுது செல்பியும் எடுக்கிறார்கள். சஜித், கோட்டாபயவுடனும் செல்பி எடுக்கிறார்கள்.இதனால் நாம் சிக்கலில் விழுகிறோம். ஆயுதம் ஏந்துவதற்கு எதிராகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைப்பை எமது கட்சி எதிர்க்கிறது என்றார்.