புதிய அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அவசரப்படத் தேவையில்லை; கரு ஜயசூரிய

புதிய அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அவசரப்படத் தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசமைப்பு திருத்தத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனைக் கொண்டு வருவதற்கு ஏன் அவசரப்படவேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புறக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்-

“மகா சங்கத்தினர், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுக் கொண்டு நாட்டுக்குச் சாதகமான முறையில் இந்த அரசமைப்பு திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொள்ளப்பட்ட 69 லட்சம் வாக்காளர்களைப் போன்றே அரசுக்கு கிடைக்காமல் போன 62 லட்சவாக்காளர்களையும் கவனத்திற்கொண்டு ஆட்சி செய்யவேண்டும். நாட்டு மக்களின் ஜனநாயகத்துக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்றார்.