தமிழர் விடுதலைக் கூட்டணிக்குளும் வலுக்கும் உட்கட்சி மோதல்; அரவிந்தனை வெளியேற்றுகிறார் சங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் ச.அரவிந்தன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவர் எனத் தன்னைத் தானே அரவிந்தன் கூறிக்கொண்டு திரிகின்றார். சிரேஷ்ட உப தலைவர் எனப்பாவிக்க வேண்டாம் என அவரிடம் பல முறை எடுத்துக் கூறியிருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்தும் சிரேஷ்ட உப தலைவர் என்ற பதவிநிலைப் பெயரைப் பாவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் அரவிந்தன், என்னுடைய ஜென்ம எதிராகிய மாவை சேனாதிராஜாவின் மகனாகிய கலையமுதனுடன் எமது அலுவலகத்தில் வைத்து இரகசிய சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படியானவரின் மகனுடன் இரகசிய சந்திப்பு நடத்த வேண்டிய தேவை ஏன் அவருக்கு உருவாகியது?

தமிழர் விடுதலைக் கூட்டணியை என்னுடைய சொந்த நிதியில் வளர்த்துள்ளேன். தேர்தல் செலவுகளுக்காக கட்சி அலுவலகக் காணியை ஈடுவைப்பது தொடர்பிலும் அரவிந்தன் என்னுடன் கலந்துரையாடினார். அப்படியானவரிடம் பொறுப்புக்களை கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிடும்.

அவர் இலண்டனில் இருந்து வந்தவுடன் கட்சித் தலைமையை ஒப்படைக்க நாங்கள் இங்கு கருவாட்டுக் கடை நடத்தவில்லை. மூன்று வருடங்களில் அரவிந்தனுக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கியிருப்பேன். ஆனால் இப்போது இவருடைய செயற்பாடுகள் பிழையாக உள்ளன. இவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றி பிரபலப்படுத்தவிரும்பவில்லை, தானாகவே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலக வேண்டும்” என்றார்.