புங்குடுதீவு  வல்லனில் பொது மக்களின் காணிகள் கடற் படையால் அபகரிப்பு

புங்குடுதீவு  வல்லனில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளது சிறீலங்கா கடற்படை. 

புங்குடுதீவு வல்லன் ( J / 24 கிராமசேவகர் பிரிவு ) பகுதியில்  மலையடி நாச்சிமார் கோயில் உள்ளிட்ட   பொதுமக்களுக்கு சொந்தமான 14 ஏக்கர் காணிகளை  வேலணை பிரதேச செயலாளரின் அனுமதியோடு இந்த வருடத்தின் ஆரம்பத்தில்  கடற்படையினர் தமது  கோட்டம்பர  முகாமிற்கு தேவையென்கிற பெயரில் அபகரிக்க முற்பட்டிருந்தபோதிலும்  வேலணை பிரதேச சபை உறுப்பினர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட  கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக அத்திட்டத்தினை கைவிட்டிருந்தனர் .

image0 2 புங்குடுதீவு  வல்லனில் பொது மக்களின் காணிகள் கடற் படையால் அபகரிப்பு

இந்நிலையில்  மீளவும்  அக்காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில்  வேலணை பிரதேச செயலாளரினால்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது . புங்குடுதீவில்  காணப்படுகின்ற   வளம் மிக்க பிரதேசமாக  ( செம்பாட்டு மண் ) இப்பிரதேசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், மேற்படி காணிக்குரியவர்கள் மாத்திரமன்றி அனைத்து நலன் விரும்பிகளையும்  இவ் அபகரிப்புக்கு எதிராக  மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்பு  போராட்டத்திற்கு தயாராகுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – தீவகம்  அழைப்பு விடுத்துள்ளது.