அநீதிகள் ஊடாக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது -இரா.சாணக்கியன்

அநீதிகள் ஊடாக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர்,

“எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அன்றைய தினம் கடைகளை அடைத்து தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

நேற்றைய தினம் கூட யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அதைப்போல பல்வேறு விடயங்களில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டு வருகின்றது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை இந்த இடத்தில் நிச்சயமாக தெரிவிக்க வேண்டும்.

அந்தவகையில் கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தாலும். வடக்கு, கிழக்கில் வாழும் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்த விடயத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

கடந்த தேர்தலில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துக்கள், அரசியல் பின்னணிகள் வேறாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தில் எங்களுடைய அன்பார்ந்த, பணிவான ஒரு வேண்டுகோள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலாக இந்த ஹர்த்தாலை நடத்த வேண்டும்.

இது இந்த அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான பதிலினை சொல்லும் ஒரு விடயமாக இருக்கும். இன்று கூட நான் பார்த்திருந்தேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சொல்லியிருந்தார், தனக்கு இரு பெயர்கள் உள்ளனவாம். ஒன்று நந்தசேன மற்றையது கோட்டாபய என இரண்டு பெயர்கள் உள்ளனவாம். இரண்டு பேரும் இரண்டு விதமாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.

தான் கடந்த காலத்தில் நந்தசேன என்றவர் ஜனாதிபதி என்ற வகையில் நடந்து கொண்டவர், இனி வரும் காலங்களில் தான் விரும்பினால் கோட்டாபய என்ற பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் போல நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் சொல்லியுள்ளார்.

இது எல்லாம் எங்களை அச்சுறுத்தி, எங்களை பயமுறுத்தி, எங்களை அடக்குவதற்காக சொல்லும் விடயங்களாகவே காணப்படுகின்றன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படக் கூடாது.

நாங்கள் ஒருமித்த குரலோடு இந்த விடயத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும். 11ஆம் திகதி காலையில் அனைத்து கடைகளையும் அடைத்து வடக்கு, கிழக்கு முழுவதும் பூரணமான ஹர்த்தாலினை கடைப்பிடித்து சர்வதேச சமூகம் வரைக்கும் நாங்கள் எங்களுடைய நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக சிறுபான்மை மக்களை அடக்க முடியாது என்ற செய்தியினை சொல்ல வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.