நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஓர் அடாவடித்தனமான செயல் – தி.சரவணபவன்

தமிழ் இனத்தின் அடையாளங்களை சிதைக்கும் நடவடிக்கைகளின் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு திரிவுபடுத்தப்பட்ட வரலாறு ஒன்றினை கற்பிக்க இவ்வரசாங்கம் முயல்வதாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஓர் அடாவடித்தனமான செயல் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட எத்தனையோ நினைவுச் சின்னங்களும், இலங்கை இராணுவத்தின் அடையாளங்களும் இலங்கையில் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் ஜே.வி.பி கலவரத்தினால் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு தூபிகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு இருக்க யுத்தத்தினால் உயிரை நீர்த்த தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அல்லது நினைவு சின்னங்களை அமைத்து அஞ்சலி செலுத்துவதற்கோ உள்ள அடிப்படை மனித உரிமைகளைக் கூட  இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறது. இதை இந்த அரசாங்கத்துக்கும், அது சார்ந்த கட்சிகளுக்கும் வாக்களித்த மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

அபிவிருத்தி என்னும் போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் கூட எதிர்கால சந்ததியினர் அறியக் கூடாது என்பதற்காக இடித்து அழித்திருந்தார்கள். தமிழர்களுக்கு அபிவிருத்தி தான் முக்கியம் என்று அரசாங்கத்தின் கைக்கூலிகள் சிலர்  இவ் அழிப்புகளுக்கு துணையாக செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அபிவிருத்தி என்னும் மாயையால் சரி செய்து விட முடியாது.  உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இன்றைய இலங்கை அரசு, இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.