பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை

ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

அயர்லாந்து, ஜெர்மனி,  பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.

உலகில் பரவி வரும் கொரோனா வைரஸைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த சூழலில் தற்போது பிரித்தானியாவில் நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

அத்தோடு இந்த வைரஸின் புதிய வடிவம் லண்டன் மற்றும் தென் கிழக்கு பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வருகிறது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த பகுதிகளுக்கு புதிய நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் காலத்திற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அத்தோடு “இந்த புதிய வடிவம் மிக ஆபத்தானது என்பதற்கும், இது தடுப்பு மருந்துக்கு வேறுமாதிரியாக எதிர்வினையாற்றும் என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை. இது 70 சதவீதம் அதிக அளவில் பரவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.  நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என பிரித்தானியாவின் சுகாதாரத்துறைச் செயலாளர் மேட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.