இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழக மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கின்றது.

இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த செவ்வாய்கிழமை  வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் 600 க்கும் மேற்பட்ட பெரிய படகுகள் கடலுக்குச் செல்லாமல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே கைதான இராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை 18ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்குமாறு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள  எழுப்பினர். மேலும் கச்சத்தீவை உடனடியாக மீட்டு தமிழக மீனவர்கள் பிரச்சனை இல்லாமல் கடலில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர்.

WhatsApp Image 2020 12 20 at 11.24.25 PM இலங்கை கடற்படையினரை கண்டித்து தமிழக மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம்

மேலும் வரும் 30 ம் திகதி இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார், ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை  இந்திய மீனவர்களுக்கு அழிக்கப்படவில்லை எனவும் இந்த பேச்சு வார்த்தை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் பிரச்சனையின்றி மீன்பிடிக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.