பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோ என பல நாட்டுத் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரான்ஸ் அதிபர் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, அதிபர் மக்ரோங், பிரன்ஸ் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அதே போல கடந்த திங்கள்கிழமை, பல நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கெடுத்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி கூட்டத்தை நடத்தியிருந்தார்.

அத்துடன் கடந்த வாரம், பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு உச்சிமாநாட்டில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் உடன், பல்வேறு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 42 வயதான அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து  மக்ரோங், ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக எலிசி அரண்மனையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அதிபர் இம்மானுவல் மக்ரோங்குடன் பல சந்திப்புக்களை நடத்தியிருந்த பல ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.