பிஃபிசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டன் அனுமதி

பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு.

தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் இந்த நிலையில்,  உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என்று பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி இரண்டு கோடி பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடுக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக  பிரிட்டன் உள்ளது.