கொரோனாவுக்கு மத்தியில் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு

இந்த ஆண்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை விட தற்கொலைகளுக்கு  உயிரிழந்தவர்களே அதிகம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

கடந்த ஒருவருடமாக கொரோனா வைரஸால் உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரச் சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜப்பானில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான  இளையவர்கள் தங்களது வாழ்க்கையை தற்கொலைகள் மூலம் முடித்துக் கொண்டுள்ளனர் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பானில் செயல்படும் மனநல பாதுகாப்பு தன்னார்வ அமைப்பின் தலைவரான ஒசாரா கூறும்போது, “ கடந்த ஜூலை மாதத்திலிருந்து எங்களுக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக எங்களைத் தொடர்பு கொண்டனர்.

அதுவும் குறிப்பாக இளைஞர்கள். கொரோனா காலத்தில் பலரது மன அமைதியின் குறைந்துள்ளது. ஜப்பானில் கொரோனாவுக்கு முன்னதாகவே தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துத்தான் வந்தது. கொரோனா காலத்தில் இன்னும் அதிகரித்து உள்ளது “ என்று தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில்  தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் மன நலத்தை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பானில் அக்டோபர் மாதம் மட்டும் 2,158 தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சமீப காலமாக பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.