நுழைவுத் தேர்வில் சித்தியடைய கையூட்டு; கொலிவூட் நடிகைக்கு சிறை

கல்லூரி சேர்க்கை தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிரபல கொலிவூட் நடிகை பெலிசிட்டி ஹப்மானுக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தனது மகள் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை ரகசியமாக எழுத வைத்து, அதிக மதிப்பெண்கள் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறைரீதியிலான அதிகாரிகளுக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் பெலிசிட்டி ஹப்மானால் கையூட்டாக வழங்கப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி, பெலிசிட்டி 14 நாட்கள் சிறையில் கழிக்க வேண்டுமென்றும், 250 மணிநேரங்கள் சமுதாய சேவையில் ஈடுபடுவது மட்டுமன்றி, 30,000 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“என்னுடைய செயற்பாட்டிற்கு எவ்வித சாக்குப்போக்கு அல்லது நியாயப்படுத்தல்களை முன்வைக்க விரும்பவில்லை. இந்த தருணத்தில் நான் மீண்டும் எனது மகள், கணவர், குடும்பத்தினர் மற்றும் கல்வித்துறையை சேர்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

எனது செயலை தெரிந்துகொண்ட என் மகள், ‘நீங்கள் என்னை நம்பவில்லையா? என்னால் சாதிக்க முடியுமென்று நீங்கள் நினைக்கவில்லையா?’ என்று கேட்டார். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை” என்று பெலிசிட்டி ஹப்மான் தெரிவித்துள்ளார்.