நினைவுத்தூபி இடிப்பு -விளக்கம் கோரும் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்

நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் சிறீலங்கா தூதுரகத்திடம் விளக்கம் கோருகிறார் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் விளக்கம் கோரியும், அதனை மீள அமைக்க கோரியும் நான் சிறீலங்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் என பிரித்தானியாவின் மிச்சம் பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள காணொளி செய்தியில்,

தமிழ் மக்களுக்கான செய்தி இது. 2008 – 2009 வரையிலான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நினைவுத்தூபியை சிறீலங்கா அரசும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (8) இரவு இடித்துள்ளது.

இது தொடர்பில் கடந்த வாரம் பெருமளவான தமிழ் மக்கள் எனக்கு மின்னஞ்சல்களை அனுப்பி இருந்தனர். நினைவாலயங்கள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமானது. அதுவே எமது வரலாற்றை அறிய முக்கியமானது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் விளக்கம் கோரியும், அதனை மீள அமைக்க கோரியும் நான் சிறீலங்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நீதி கோரி கடந்த 11 வருடங்களாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விவகாரங்கள் எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.