நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் எனக் கனவு காணும் சிங்களம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  

அத்தோடு, இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலை வளாகத்தில் குவிக்கப்பட்டு, எதிர்ப்பை வெளியிட்ட மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இருந்தும் இலங்கை அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் விடியவிடிய அப்பகுதியில் கோசங்களை எழுப்பிய வாறு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அங்கு சென்றுள்ளார். மேலும் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நினைவுதூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலை பகுதியில் கூடி வருகின்றனர்.

WhatsApp Image 2021 01 08 at 6.00.11 PM நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் எனக் கனவு காணும் சிங்களம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

இந்நிலையில், நினைவுதூபி இடித்தழிக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் என சிங்களம் கனவு காணுவதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இரவோடு இரவாகச் சத்தம் சந்தடி இல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் பொங்குதமிழ் தூபி, மாவீரர் தூபி, முள்ளிவாய்க்கால் தூபி என மூன்று நினைவுத்தூபிகள் உள்ளன.

சிங்களத்தின் அடிவருடியான துணைவேந்தருக்கு பதவிவழங்கிய போது முன்வைக்கப்பட்ட நிபந்தனையின் வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு. இன்று விலைபோகும் ஒருசில தமிழர்களை வைத்தே தமிழன அழிப்பைக் கச்சிதமாகச் செய்யும் சிங்கள அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.பொங்குதமிழின் பிறப்பிடமான யாழ் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வுள்ள பல தலைமுறைகளை அறுவடை செய்த நாற்றுமேடையாகும். அடுத்த தமிழ்த்தலைமுறைகள் தமிழ் உணர்வாளர்களாகத் துளிர்விடக் கூடாது என்பதில் சிங்களம் மிகவும் கவனாமாகச் செயற்படுகின்றது.

கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.

 – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் –
வடக்குக் கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்து தனது கலாச்சார எச்சங்களாக மாற்றிவரும் இனவாத சிங்கள அரசு இலங்கைத்தீவில் தமிழர்களின் அடையாளங்களே இருக்கக்கூடாது என்ற வன்மமான சிந்தனையுடன் காய் நகர்த்தி வருகின்றது. தூபிகளையும் நினைவுச்சின்னங்களையும் அழிப்பதால் தமிழரின் விடுதலை வேட்கையையும் தமிழ் உணர்வையும் இல்லாது ஒழித்துவிடலாம் என்று கனவு காணும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்க மக்கள் புரட்சி வெடிக்கட்டும் பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.