யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்படுகின்றது (மேலதிக தகவல்களுடன்)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, நினைவிடம் ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, நினைவிடம் ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.

  முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது

சிறீலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் முன்னிலையில் இரவு வேளை இதை இடிக்கிறார்கள். சட்டவாளர் சுகாஸ் மற்றும் சிலர் எதிர்ப்பை தெரிவித்து அந்த இடத்தில் நிற்கின்றனர். இருந்த போதும் கூடுதலாக காவல்துறையினரை குறிப்பிட்ட இடத்தில் பணிக்கமர்த்தியும் படையினரை சுற்றுக்காவலில் ஈடுபடுத்தியுமே முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்படுகிறது.

இந்த அழிவை தடுப்பதற்காக சட்டத்தரணி சுகாஸ் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது முகநூல் வழியாக அவர் விடுத்த வேண்டுகோளில், யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். வாசல் கதவை மூடிவிட்டு இந்த அழிப்பு நடவடிக்கை நடைபெறுகின்றது. எனவே இதனைத் தடுப்பதற்கு உடனடியாக மக்களை யாழ். பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், சட்டத்தரணி சுகாஸ் உட்பட பலர் பல்கலைக்கழக முன்றலில் இருக்கின்றனர்.