நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்…

தமிழர்களிற்கே உரித்தான ஓர் கலாசாரம்

அடிப்படை போக்குவரத்து வசதிகள் அற்ற காலத்தில் பாதசாரிகள் கொண்டு செல்லும் சுமையை தனித்து இறக்கி, களைப்பாறி தூக்கிச் செல்லவும், மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் என 2000ஆம்  ஆண்டுகளிற்கும் முன்பு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் அதன் முக்கியத்துவமும் அறியாமல் குத்துக்கல்லுகளாக காட்சியளிக்கின்றன.

இயந்திரப் போக்குவரத்திற்கு முன்பு  மடம், கேணி, சுமைதாங்கி, ஆவுரஞ்சிக் கல்  என்பன கூட்டுணைந்து அமைக்கப்பட்டன. இது 2 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு அறிமுகமானதாக வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு அமைக்கும் மரபு மாட்டு வண்டில் பயணங்கள் ஆரம்பித்த காலத்துடன் குறைவடைந்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.  இந்த சுமைதாங்கிகள் அன்றைய காலத்தில் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றவர்களால் முதன்முதலாக  அமைக்கப்பட்டதாகவும், வேறும் சில சிலரது நினைவாகவும் அமைக்கப்பட்டன. வடமராட்சியில் ஒருவர் மட்டும் 7 இடத்தில் சுமைதாங்கிகளை அமைத்துள்ளார். போர்த்துக்கேயர் காலத்தில் அவர்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லை. அதனால் இவை  தப்பி பிழைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

2 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு தமிழர்கள் மத்தியில் இருந்த ஓர் கலாசாரம்

2009இற்குப் பின்பு இது பௌத்த வழிபாட்டு ஆரம்பமா எனவும் கேள்வி எழுப்பியதோடு, அந்த திசையிலும் சிலர்  ஆராய முற்பட்ட போதும்,  அது உண்மையில்லை எனக் கண்டறியப்பட்டது.  2 ஆயிரத்து 500 ஆண்டிற்கு முன்பே மாடு வளர்த்தமையும், அக் காலத்தில் ஆவுரஞ்சி இருந்தமையினை காண்பிப்பதோடு யாழ்ப்பாணத்தில் 17ஆம் நூற்றாண்டில் இவைகள் அமைக்கப்பட்டமைக்கான சான்றுகள் ஆவண ரீதியாக உள்ளன. வீராத்தை என்ற  பெயரையுடைய நினைவு கல்வெட்டுகளில் அவை காணப்படுகின்றன.

ஆவுரஞ்சிக் கல் மற்றும் மடம், சுமைதாங்கி, கால் நடைக்கான தண்ணீர் தொட்டி அனைத்தும்  கூட்டிணைந்து  அமைக்கப்படும் நடைமுறை இலங்கையில்  யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுகின்றது என வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவிப்பதோடு, இவ்வாறு அமைக்கும் மரபு மாட்டு வண்டில் பயணங்கள் ஆரம்பித்த காலத்துடன் குறைவடைந்துள்ளன என்றும் கூறியிருந்தார். அவர் கூறியதை அவ்வாறான மையங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளும் உறுதி செய்கின்றன.

இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஓர் அரும் பொக்கிசமாக காணப்படும் இந்தவகையான ஆயிரத்திற்கும் மேற்பட்டசொத்துக்கள் 60 ஆண்டுகளிற்கு முன்புவரை, யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, காரைநகர் முதல் அனைத்துப் பிரதேசத்திலும், காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இவை அனைத்துமே அமைக்கப்பட்ட காலத்தின் போக்குவரத்துப் பாதைகளை மையமாக கொண்டே அமைக்கப்பட்டது. அதாவது கால்நடையாக பயணிப்போர் தாகம் தீர்க்க, களைப்பாற என்பதற்கும் அப்பால், மடங்களில் இரவில் தங்கி பயணிக்கும் வசதியுடனேயே அமைக்கப்பட்டன.  போக்குவரத்துப் பாதையில் அமைக்கப்பட்டதனால் அந்தப் பாதைகளே பிற் காலத்தில்  வீதிகளாக மாற்றமடைந்தபோது  வீதி அகலிப்பின் காரணமாக  இவற்றின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும்  வரலாறு தெரியாதோர் இடித்து அழித்தமை மனவேதனைக்குரியது.

இதன் மகத்துவத்தையும், வரலாற்றையும் அடுத்து வரும்  சந்ததியினருக்கு  எடுத்துச் செல்ல வேண்டும்

இதன் பெருமையை அறியாதவர்கள் அழித்தனர் என்றால்,  அறிந்தவர்கள் மௌனமாக இருப்பதால், எஞ்சியவையும் அழிவடையவே செய்யும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைக்கப்பட்டபோதும், வன்னிப் பகுதியில் இவற்றினை காண முடியாதுள்ளது. ஒரு சில இருக்ககூடும். வன்னியிலே அதிக குளம், அதிக மரம் இருந்தமையினால் இவற்றின் தேவை காணப்படாமல் இருந்திருக்கக் கூடும். இவற்றின் மூலமும் தமிழர்களின் தொன்மை எடுத்தியம்பப்படுவதனாலேயே இதன் தோற்றம் ஒன்றை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்குள்ளும் தற்போது அமைத்து வருகின்றோம் என்றார் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள்.

PHOTO 2020 09 20 21 27 23 நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்...

இதேநேரம் நல்லூர் சங்கிலியன் வீதியில் தனது வீட்டின் முன்பாக ஓர் ஆவுரஞ்சிக் கல்லினை கடந்த 3 வருடங்களிற்கு முன்பு நாட்டி, அதன் அருகில் நீர்த் தொட்டியினையும் அமைத்துள்ள ஆர்.நிசாந்தன், (வயது 36) என்னும், ஒப்பந்த பணியாற்றுபவரிடம் இதனை ஏன் நாட்ட விரும்பினீர்கள், இந்தக்கல்லை எங்கு பெற்றீர்கள், இதன் முக்கியத்துவத்தை அறிவீர்களா? என கேள்விகளை அடிக்கினேன்.

அதற்கு அவரும் சளைக்காமலே பதிலை அளித்தார். அதாவது மன்னர் காலம் முதல் காலனித்துவ ஆட்சிக் காலங்களில் எமது பரம்பரையினர் மாடுகளை எவ்வளவு அன்பாகவும், அடையாளமாகவும் வளர்த்துள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டும் அடையாளம் இது. யாழில் எங்கெல்லாம் நீர் நிலைகள் உள்ளனவோ அதன் அருகே இந்த ஆவுரஞ்சிக் கல்லும் இருந்துள்ளது. ஆனால் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானத்தில் ஈடுபடுவோர் அவ்வாறான தமது ஆக்கிரமிப்பு வெளித்  தெரிந்துவிடும் என்பதற்காக அதன் அருகே இருந்த சுமைதாங்கிக் கற்களை இடித்தழித்ததோடு இந்த கற்களை பிடுங்கி எறிகின்றனர். அவ்வாறு எறியப்பட்டிருந்த ஓர் கல்லை பக்குவப்படுத்தி அதே பயன்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளேன் என்றார்.

thumbnail PHOTO 2020 09 20 21 27 16 நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்...

ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு வீதிகளில் சீமெந்து தூண்களோ அல்லது கட்டிடங்களோ காணப்படாதமையினால் இதன் பயன்பாடு இன்றியமையாது காணப்பட்டிருப்பினும், தற்போது மாடுகளிற்கு உரஞ்சுவதற்கு போதிய இடங்களும் இருக்கலாம். ஆனாலும் புதிதாக அமைக்காது விடினும் இருப்பதனை பேணிப்பாதுகாத்து, அதன் முழுப் பயன்பாட்டை அடைய வழி சமைக்க வேண்டும்.

இவற்றினை ஆலயங்களினால் பாதுகாக்க முடியும்.

இன்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் பல நூற்றுக்கணக்கான ஆவுரஞ்சிகளில் அநேகமானவை ஆலயங்களை அண்டியே காணப்படுகின்றன. அவற்றில் பல ஆலயங்கள் இவற்றினை மூடி முட் கம்பி வேலிகளை அமைத்தும் சிலவற்றினை அழித்தும் வருவது கவலையளிப்பதாக மூத்த அர்ச்சகர் ஒருவர் தனது ஆதங்கத்தை  தெரிவித்தார்.

இதேநேரம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் முன்பாகவுள்ள சிறாப்பர் மடத்தின் வாசல் அருகே இருந்த சுமைதாங்கி, ஆவுரஞ்சிக்கல், கால்நடைக்கான நீர்த் தொட்டியில் இன்று சுமை தாங்கியை காணவில்லை. அதேபோல் மடத்தை புனரமைக்க தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியை பெறமுடியவில்லை. இதன் பயன்பாடு தொடர்பில் அப்பகுதி மூத்தவர்களிடம் கேட்டபோது,  என்னதான் மாற்றமும் வளர்ச்சியும் வந்தாலும் பழமையை மறந்தால் எதுவுமே ஆகாது என்பதற்கு இதுவும் நல்லதோர் உதாரணம். விஞ்ஞான காலத்தில் ஓர் விடயத்தை  கூறும் வடிவம் வேறு; பழங் காலத்தில் கூறிய வடிவம்வேறு. அதன் ஊடகாவே எமது இனமும், கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என்பவற்றின் அடையாளங்களும் அதன் தொன்மையும்  உள்ளதனை என்றுமே நிரூபிக்கும் ஓர் சான்று ஆவணம் இவை  என்றார்.

கீரிமலை சிறாப்பர் மடமும் இந்த ஆவுரஞ்சிக்கல், தொட்டி என்பன 150 ஆண்டுகளிற்கு முன்பு அமைக்கப்பட்டது உறுதியானது. ஏனெனில்  கொங்கொங் வங்கியில் பணியாற்றிய  கதிரவேலுச் சிறப்பாரே இதனை  கட்டினார். இவர் 1909ஆம் ஆண்டில் காலமானார். இவர் சண்டிலிப்பாயை சேர்ந்தவர். ஆகவே இதனை அமைத்தவர் மறைந்தே இன்று 110 ஆண்டுகள் கடந்து விட்டன. இவரே சண்டிப்பாய் பாடசாலை அருகில் உள்ள ஆவுரஞ்சியினையும் அமைத்ததாக கூறப்படுகின்றது என்றார்.

அபிவிருத்தியின் பெயராலேயே அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

குறித்த விடயம் தொடர்பில் தாவடியில் உள்ள பதிவாளர் அ.செந்தில்குமரன் என்னும் 58 வயதுக் குடும்பஸ்தர் தெரிவிக்கையில், எனது பாடசாலைப் பருவத்தில் தற்போதைய யாழ்ப்பாணம் பிரதம தபாலகம் முதல் காங்கேசன்துறைக்கு இடைப்பட்ட பகுதியில் 15இற்கும் மேற்பட்ட இடங்களில் காணப்பட்ட இந்த மரபுச் சின்னங்களில் இன்று ஒன்றுகூடக் காணப்படவில்லை. இதேநேரம் நந்தாவில் முனியப்பர் ஆலயம் முன்பாக தொட்டி மட்டும் அடையாளமாகவுள்ளது என்றார்.

இதேநேரம் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் அராலிப் பகுதிகளை அண்டிய கிராமங்களில் இவை அதிகமாகவும் காணப்படுகின்றமை தொடர்பில் வினாவியபோது, அப்பகுதியின் பல பகுதிகள் உவர் நிலங்களாக காணப்பட்டதனால் இவ்வாறான தொட்டிகள் ஆவுரஞ்சிக்கல் அமைத்து கால்நடைகளிற்காக நீர் நிரப்பி வைத்தனர். இதேநேரம் பலாலி வீதியிலும் பல காணப்பட்டு வீதி அகலிப்பின்போது அழிவடைந்தபோதும் கந்தர்மடம் சந்தியில் இரு கற்கள் இருந்தன. கல்லும் தொட்டியும் வீதி அகலிப்பின்போது அழிக்கப்பட்டமை வேதனை அழிப்பதாக இருந்தாலும், எச்சங்கள் மிஞ்சியிருந்தன. அவைகளையும் நீர்க்குழாயினை தாக்கும் பணியில் ஈடுபட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், அதன் முக்கியம் அறியாது முழுமையாக அழித்து விட்டனர் என பலாலி வீதியில் வர்த்தக நிலையம் நடாத்தும்  திருமேனி-ஜெகநாதன் , என்னும்  68 வயது வர்த்தகர் தெரிவிக்கின்றார்.

தென்மராட்சியில் வரணி இடைக்குறிச்சி, சாளுக்குறிச்சிக் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவுரஞ்சிக்கல்லே யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் ஆவுரஞ்சிக் கல்லுகளில் பெரிய கல் எனக் கருதப்படுகின்றது. இதன் உயரம் 5 அடியினையும் தாண்டுகின்றது.

தொல்லியல் திணைக்களத்தின் படிக்கல்லா அல்லது தடைக்கல்லா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

பல ஆவுரஞ்சிக் கல் உள்ளிட்ட மடங்கள், கேணிகள்  போன்றவற்றை தொல்லியல் திணைக்களம் தனது சின்னமாக பிரகடனப்படுத்தி அதனை புனரமக்க தடை போட்டுள்ளது. இவ்வாறு தடை போட்டதனால் அவை எஞ்சியுள்ளனவா அல்லது உள்ளதால் தடை போடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தாலும் பல இடத்தில் இன்மும் சில அரைப் பங்கு அழிவடைந்து எஞ்சியவை காணப்படுவதனை இந்த தொல்லியல் திணைக்களங்களும் கண்டுகொள்ளவில்லை.

குறிப்பாக மானிப்பாய் பொதுச் சந்தை முன்பாக மடம், தொட்டி என்பன அழிவடைந்தபோதும், ஆவுரஞ்சிக்கல் வீதியோரம் இன்றும் உள்ளது. அதனை என்ன என அருகில் இருந்தவர்களிடம் வினாவியபோது அது கிலோ மீற்றர் கல் என ஒருவர் கூறினார். இன்னுமோர் பெண்மணியே மிகத் தெளிவாக இது ஆவுரஞ்சிக் கல் இதனுடன் இருந்த சுமைதாங்கி, தொட்டி அழிவடைந்த தடயமே அதில் உள்ளது. என எச்சங்களை காண்பித்தார்.

தமிழர்களின் தொன்மை வரலாறு, அதாவது எமது மரபுகளை எமது எதிரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல, நாமும் அழிப்பது கவலைக்குரியது.  யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கே உரித்தான இந்த மரபுவழிச் சின்னம் ஆகியவற்றுடன், புண்ணியம் கருதி அமைக்கப்பட்ட இவற்றினை புதிதாக அமைக்காது விட்டாலும் இருப்பதனை பேணிப் பாதுகாப்பதற்கும் இதனை பாதுகாக்க வேண்டிய தேவையினை அடுத்த சந்ததிக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவரிற்குமே உரியது.