கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி – பலர் பாதிப்பு

கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவில் அவர்கள் மோசடி செய்துள்ளனர்.

மேலும், கடந்த ஒரு வருட காலமாக எந்தவித முதலீட்டு இலாபங்களையோ அல்லது எங்களின் முதலீட்டையோ தராமல் ஏமாற்றி வருகிறார்கள். அது மட்டுமின்றி, மூடப்பட்ட கணக்கின் காசோலைகளையும் தந்துள்ளார்கள். எங்களுடைய பணத்தைப் பயன்படுத்தி பொதுத்தேர்தலில் கூட அவர்கள் போட்டியிட்டுள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பில் அரசின் அதிகாரிகள், பொலீஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் எனப்பலருக்கும் தெரியப்படுத்தியும் எவ்வித பலமிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சுமத்தினார்.

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாமல் இவர்கள் இயங்கியதாக அறிந்து கொண்டே நாங்கள் வைப்பிலிட்டோம். இது தொடர்பில் அவர்களிடம் விசாரித்த போது, மத்திய வங்கியில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு இலாபம் கூடுதலாக வழங்க முடியாது என்றார்கள். அதையும் நாங்கள் நம்பினோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள், உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இது விடயத்தில் நடவடிக்கையெடுக்கத் தவறும் பட்சத்தில் ஜனாதிபதி மாளிகை முன்னால் சாத்வீகப் போராட்டத்தில் இறங்குவோம். அத்துடன், சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

நன்றி:எஸ்.அஷ்ரப்கான், நூறுள் ஹுதா உமர்