”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் 2

இத்தாலி 1947-1948: ஹொலிவுட் பாணியில் சுதந்திரமான தேர்தல்

1946 இல் இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும் தனித்தனியாக எடுத்த வாக்குகள் ஏனைய எல்லா கட்சிகளையும்விட அதிகமானது. 1948இல் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட திட்டமிட்டன. இதனால் இத்தாலியில் ஒரு இடதுசாரி ஆட்சி வருவது மிகவும் சாத்தியமானதாக இருந்தது. இத்தருணத்தில்தான் ஐ-அமெரிக்கா தனது பல் வேறு பொருளாதார அரசியல் தந்திரங்களை இத்தாலியின் மேல் பிரயோகிக்க தொடங்கியது. பொதுமக்களின் கருத்துக்களை மாற்ற தான் கூர்மையாக்கி வைத்திருந்த ஹாலிவூட் மற்றும் ஏனைய தந்திரங்களையெல்லாம் பாவித்தது. இத்தாலியில் இருந்த அடிப்படை பிரச்சனைகளான விவசாயம் பொருளாதார சீர்திருத்தம் போன்றன தேர்தல் பிரச்சாரப் பொருளாக வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியது. தேர்தல் கம்யூனிசத்துக்கும் ஜனநாயத்திற்கும் இடையேயான போட்டியாக மாற்றப்பட்டது.degasperitogliatti ”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி

ஜனவரி 1947 இல் இத்தாலியின் பிரதமர் கஸ்பேரி வாஷங்டனின் அடைப்பில் அங்கு சென்றார். அங்கு போரால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை கட்டியெழுப்ப நிதியுதவி கேட்கும் நோக்கத்துடன் சென்றார். இத்தாலிக்கு திரும்பி மூன்று நாட்களில் எதிர்பராத விதமாக தனது அமைச்சரவையை கலைத்தார். இவ்வமைச்சரவையில் பல கம்யூஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் இருந்தனர். அமைச்சரவை கலைக்கப்பட்டதற்கும் பிரதமரின் ஐ-அமெரிக்க பிரயாணத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை குறைப்பதற்காகவே இது கலைக்கப்பட்டதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று செய்திகளை அக்காலத்தில் ஊடகங்கள் வெளியிட்டன. இருந்தாலும் புது அமைச்சரவை அறிவிக்கப்பட்டபோது அதில் இடதுசாரிகள் இருப்பதை பிரதமரால் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் இடதுசாரிகள் முக்கியமான சில அமைச்சர் பதவிகளை இழந்திருந்தார்கள்.

தொடர்ந்த மே மாதத்தில் துணைப்பிரதமர் ஒரு குழுவை வாஷிங்டனுக்கு அழைத்துச் சென்றார். ஐ-அமெரிக்க உதவியை மீண்டும் கேட்பதுவே இவர்கள் நோக்கம். அத்துடன் முன்னர் தருவதாக ஐ-அமெரிக்கா உறுதி செய்து பின்னர் காரணம் தெரிவிக்காமல் முடக்கி வைத்திருந்த கடனை கேட்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது. இடதுசாரியினரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றும் வரை ஐ-அமெரிக்கா உதவியையும் கடனையும் முடக்கியிருக்கிறது என்று அக்காலத்தில் இத்தாலியின் இடதுசாரிகள் பலமுறை சொல்லி வந்தார்கள். நியுயோர்க் ரைம்ஸ் பேப்பரும் இம்மாதிரியான ஒரு கருத்தை அப்போது வெளியிட்டிருந்தது.

இதுதான் இறுதியில் நடந்தது. தொடர்ந்த சில மாதங்களில் ஐ-அமெரிக்காவின் பெரும் தொகையான நிதி உதவிகள் இத்தாலியை அடைந்தது. அத்துடன் இத்தாலியின் ஒரு பில்லியன் டொலர் கடனும் இரத்துச் செய்யப்பட்டது. இதே காலத்தில் ஐ-அமெரிக்காவிடம் உதவி எதிர்பார்த்திருந்த பிரான்ஸ் நாட்டின் அரசிலிருந்தும் பல கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டார்கள். இத்தாலியின் இடதுசாரி முன்னணிக்கு எதிரான பல செயற்பாடுகளால் அவர்களின் செல்வாக்கு மிக துரிதமாக நலிவுற்றது. இச்செயற்பாடுகளில் சில:

அமெரிக்க இத்தாலியர்கள் இத்தாலியில் உள்ள தமது உறவினருக்கு ‘கம்யூனிஸ்டுகளின் வெற்றி இத்தாலியை நாசமாக்கும். ஐ-அமெரிக்கா உதவிகளை நிறுத்தி விடும். இதனால் இன்னுமொரு உலகப் போர் உருவாகும். அழகான இத்தாலியை கொடுமையான கம்யூனிஸ்டுகளின் கைகளில் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துறோம்…’ என்பன போன்ற கடிதங்களை பெரும் தொகையாக அனுப்பினார்கள்.

  • இதையோ ஐ-அமெரிக்கா அரசும் தனது அறிக்கைகளில் வெளியிட்டது, ‘கம்யூனிஸ்டுகள் வென்றால்…ஐ-அமெரிக்காவிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்காது.’
  • ஐ-அமெரிக்க அரசின் பின்னணியுடன், அங்குள்ள அமெரிக்க பிரபலங்களின் பங்குடன் தினமும் இத்தாலியை நோக்கிய சிற்றலை ஒலிபரப்புக்கள், ‘உங்கள் தெரிவு கம்யூனிசமா அல்லது ஜனநாயகமா, கடவுளா அல்லது கடவுளற்றதா, ஒழுங்கா அல்லது குழப்பமா’ போன்ற செய்திகளை பரப்பின.
  • பல வர்த்தக வானொலிகள் ‘இந்த கடினமான நேரத்தில் போப்பாண்டவருக்காக பிரார்த்தனை செய்வதாக..’ இத்தாலிக்கான சிறப்பு சேவைகளை ஐ-அமெரிக்க கத்தேலிக்க தேவாலயங்களிலிருந்து ஒலிபரப்பின. இவற்றில் ஒரு வானொலியில் ஒரு கிழமை முழுவதும் ஐ-அமெரிக்காலுள்ள இத்தாலியர்கள் ஒரு நிமிட செய்திகளை சிற்றலையில் இத்தாலிக்கு வழங்கினார்கள்.
  • ‘அமெரிக்காவின் குரல்’ என்ற அரச வானொலி தனது இத்தாலிக்கான சேவையை மிகவும் அதிகப்படுத்தியது. இதில் ஐ-அமெரிக்கா இத்தாலிக்கு வழங்கிய உதவிகளையும் தமது நட்பையும் சொல்லிக்காட்டின. அமெரிக்காவின் பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றார்கள்.
  • இத்தாலியிலிருந்த ஐ-அமெரிக்கர்கள் ஐ-அமெரிக்காவின் பொருளாதார உதவிகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை எங்கும் விநியோகித்தார்கள். குறைந்த வருமான மக்கள் மத்தியில் பல கண்காட்சிகளை இதே போல் நடத்தினார்கள்.
  • ஐ-அமெரிக்கா நீதி திணைக்களம், கம்யூனிஸ்ட் கட்சியை சேரும் இத்தாலியர்கள் அமெரிக்காவுக்கு வர முடியாது என்று அறிவிப்புகள் விட்டன. அமெரிக்காவுக்கு போவது அன்று பல இத்தாலியர்களின் கனவாக இருந்தது.
  • ஐ-அமெரிக்காவும் இத்தாலியும் 10 வருட ‘நட்பும், வணிகமும், கடல் போக்குவரத்தும்’ என்ற ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐ-அமெரிக்கா கைச்சாத்திட்ட முதலாவது ஒப்பந்தம் இதுவே.

ஐ-அமெரிக்காவின் இந்த நாடகத்தின் முடிவில் இத்தாலியில் வலதுசாரிக் கட்சியான ‘ஜனநாயக கிறிஸ்தவர்’ கட்சி 48 வீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இடதுசாரி முன்னணி 31 வீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது. இத்தகைய ‘அறப்போரையே’ வலதுசாரிகளின் தந்திரமாக பின்னர் இவ்வாறு சித்தரிக்கப்பட்டது: ’20ம் நூற்றாண்டின் வலதுசாரிகளின் தேர்தல் கலை என்பது செல்வத்தை பாவித்து ஏழ்மை தனது அரசியல் சுதந்திரத்தின் மூலம் செல்வத்தை அதிகாரத்தில் அமர்த்துவதே’.

பாகம் -3 தொடரும்

 

பாகம் -1

”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி