தொடரும் சிறை வன்முறைகள் : விதுரன்

சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் சீர் திருத்தக் கூடங்களா அல்லது மனித உயிர்களைப் பலிகொள்ளும் மரணப் பொறிகளா என்ற கேள்விகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில்; அரங்கேறிய இரத்தக்களரியை அடுத்து வெகுவாக மேலெழுந்துள்ளன.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறை வளாகத்திற்குள் வெடித்த வன்முறை, சாதாரண கைதிகள் மோதலாக ஆரம்பித்து, இறுதியில் 8 சிறைச் சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட 28 பேரின் உயிர்களைப் பலிகொண்ட கொடூர வன்முறையாக முடிவடைந்துள்ளது.
27 வயதேயான சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையின் அதிகாரி தர்ஷன தரங்க முதல், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 73வயதான இந்தியப் பிரஜை உன்னிகிருஷ்ணன் சுப்பிரமணியம் வரை இந்த வன் முறையில் சிக்கி மாண்டுபோயுள்ளனர்.
இச்சம்பவம் இலங்கையின் சிறைச்சாலை கட்ட மைப்பு நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான வீழ்ச்சியையும், சீர்திருத்தப்பட மறுக்கும் அதன் அவல நிலையையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டி யுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் இந்த கோர சம்பவத்திற்குப் பின்னால் சிறைக்குள் தடையின்றி அரங்கேறும் போதைப்பொருள் வர்த்தகமும், கைதிகளிடை யேயான குழு மோதல்களுமே பிரதான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
சிறைக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்த இரகசியத் தகவல் அதிகாரிகளுக்குக் கசிந்ததைத் தொடர்ந்தே, ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ மற்றும் ‘ரொக்கி’ போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பின்னணியைக் கொண்ட கைதிகள், தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சக கைதிகள் மீது ஜூலை 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.
சட்டவிரோத போதை மாத்திரைகளை உட்கொண்ட கைதிகளின் வன்முறைக் குணம், மறுநாள் காலை உணவின் போது சிறை அதிகாரிகளை இலக்கு வைக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மறுநாளான ஜுலை 6ஆம் திகதி காலை சிறைச் சாலையின் பிரதான இரும்பு மற்றும் பலகைக் கதவுகளை உடைத்துக்கொண்டு கைதிகள் பெருமளவில் தப்பியோட முயன்றபோது, அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு அதிகாரி கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகள், இந்த வன்முறையின் கொடூரத்தை அப்பட்டமாக வெளிப் படுத்தியுள்ளன. உயிரிழந்த கைதிகளில் 15பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினாலும், ஏனைய கைதிகள் கடுமையான தாக்குதல்களினாலும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறை அதிகாரிகள் அனைவரும் கைதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, மண்டை யோட்டுப் பகுதி சிதைந்து, மூளையில் ஏற்பட்ட கடுமையான இரத்தக் கசிவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவசர கடமைக்காக வந்திருந்த அதிகாரி, கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்போது சிறைக்கு வெளியேயும் அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படும் அளவிற்குக் கடுமையான அச் சுறுத்தல்கள் தற்போதும் நீளுகின்றன.
நீர்கொழும்பு வன்முறையைத் தொடர்ந்து, அங்கி ருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட சுமார் 1,200 கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள வெலிக்கடை, பூஸா, அங்குணகொலபெலஸ்ஸ, தும்பறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற சிறைச்சாலைகளுக்கு அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த இடமாற்றமானது சிறைச்சாலை அதிகாரிகளின் பழிவாங்கும் படலமாக மாறியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. கைதிகள் பாதுகாப்புக்கான குழு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன, இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் புதிய சிறைகளில் கடுமையான சித்திரவதைகளுக்கும் அநா கரிகமான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாகக் குறிப் பிட்டுள்ளன.
குறிப்பாக, கலவரத்தின் சூத்திரதாரியாகக் கருதப் படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்குள்ள சக கைதிகளால் அதிகாரிகளின் தூண்டுதலால் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலில் எழுந்து நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதைவிடவும் வெலிக்கடை சிறைச்சாலையின் காவலில் இருந்தபோது இரு கைதிகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதோடு  இடமாற்றப்பட்ட கைதிகளில் பலர் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதைத் தாண்டி, சிறைத்துறையினரின் கூட்டுப் பழிவாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதா என்ற பெருங்கேள்விகள் இவ் விடத்தில் எழாமில்லை.
நீர்கொழும்பு வன்முறை மற்றும் அதன் பின்னரான சித்திரவதைகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் அலு வலகத்தின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி தனது கடுமையான கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச நெறிமுறைகளை மீறிய அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள் ளார்.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஜூலை 7ஆம் திகதி இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவசர விசாரணைப் பிரிவினருக்குச் சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகத் தகவல் கிடைக்கும் போது, எந்தவொரு தடுப்புக் காவல் மையத்திற்கும் முன் அறிவிப்பின்றிச் சென்று சோதனையிடும் சட்டப்பூர்வ அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளது.
அதனைத் தடுத்ததன் மூலம், சிறைத்துறை எதனை மறைக்க முயல்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதன் காரணமாகவே, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது உத்தியோகபூர்வ அழைப்பாணை விடுத்துள்ளது.
மேலும் நாட்டின் தற்போதைய சூழலில்  ஒட்டு மொத்த சிறைச்சாலை கட்டமைப்பும் எப்போது வேண்டு மானாலும் வெடிக்கக் கூடிய ஒரு எரிமலையாகவே இருந்து வந்துள்ளது என்பதை இந்த நீர்கொழும்பு சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு வெறும் 11,000 முதல் 12,000 கைதிகளை மட்டுமே தங்கவைக்கக் கூடியதாகும். ஆனால், தற்போது 40,000 க்கும் அதிகமான கைதிகள் அனைத்து சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 286சதவீதத்திற் கும் அதிகமான நெருக்கடியாகும். போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தற்காலிகக் கைது நடவடிக்கைகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழி கின்றனவே தவிர, முறையான சீர்திருத்தங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை.
இந்நெருக்கடிக்குத் தீர்வாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க, 100வருடங்கள் பழமையான போகம்பரை சிறைச் சாலையை மீண்டும் திறக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இச்செயற்பாடானது ‘உடனடி உணவு’ சமைப்பது போன்றதொரு தற்காலிகமான தீர்வாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கண்டி நகரின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக, பல்லேகல பகுதிக்கு சிறைச்சாலை மாற்றப்பட்ட பின்னர், போகம்பரை நிலத்தில் பன்னோக்கு முதலீட்டுத் திட்டங்களை உருவாக்க நல்லாட்சி அரசாங்கத்தில் திட்டமிடப்பட்டது.
அதனை விடுத்து, மீண்டும் பில்லியன் கணக்கான வரிப்பணத்தைச் செலவழித்து பழைய சிறையைத் திறப்பது கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தியைப் பின்னோக்கித் தள்ளும் செயலாகும். சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைக்க அரசாங்கம் புதிய சிறைகளை உருவாக்குவதை விடுத்து, சட்ட ரீதியான மாற்று வழிமுறைகளைக் கையாள வேண்டும். சிறைகளில் உள்ளவர்களில் 75 சதவீதமானோர் விளக்க மறியல் கைதிகளாவர்.
இவர்களில் பெரும்பாலோர் மிகச் சிறிய குற்றங் களுக்காக, சிறு தொகைப் பிணைப்பணத்தையோ அல் லது அபராதத்தையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடு பவர்கள். இவர்களுக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு தலா 1,500 ரூபா வீதம் மில்லியன் கணக்கில் செலவிடுவதை விட, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைப் போல ‘பிணை நிதியம்’ ஒன்றை உருவாக்குவது அவசியமாகும்.
மேலும், இலத்திரனியல் கண்காணிப்பு வளை யங்களுடன் கூடிய ‘வீட்டுக்காவல்’ முறையை அறிமுகப் படுத்துவது அரசாங்கத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன் சிறைகளின் நெரிசலையும் பெருமளவு கட்டுப்படுத்தும்.
இலங்கையில் 1983 ஜுலை 25இல் குட்டிமணி, தங்கத்துரையின் மரணத்திலிருந்து 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, 2020 ஆம் ஆண்டு மகர சிறைச்சாலை வன்முறை எனத் தொடரும் கறைபடிந்த வரலாற்றின் வரிசையில் இப்போது நீர்கொழும்பு சிறைச் சாலையும் இணைந்துள்ளது.
அரசாங்கம் வழமை போல மூவரடங்கிய விசார ணைக் குழுக்களை அமைப்பதோடு தனது கடமையை முடித்துக் கொள்ளக் கூடாது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளின் பாதுகாப்பு, உளவுத்துறையின் பலவீனம் மற்றும் சிறைக்குள் நிலவும் ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
சிறைச்சாலை என்பது பழிவாங்கும் நரகமல்ல. அது மனிதர்களைப் புனரமைக்கும் சீர்திருத்த மையம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஐ.நா. வசிப்பிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் குறிப்பிட்டது போல, சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் பாதுகாப்பும் அரசின் நேரடிப் பொறுப்பாகும்.
அரசாங்கம் இனியாவது தற்காலிகத் தீர்வுகளைத் தேடாமல், தசாப்தங்களாகக் கிடப்பிலுள்ள சிறைச்சாலை சீர்திருத்தப் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாகச் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லையெனில், நீர்கொழும்பு போன்ற கொடூரங்கள் எதிர்காலத்திலும் தொடர்வதைத் தடுக்க முடியாமல் போய்விடும் பேராபத்து நிறைந்திருக்கின்றது.