தெல்லிப்பளை வைத்தியசாலை விகாரம்- போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

தெல்லிப்பளை வைத்தியசாலையில்  மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதை தெரியப்படுத்தியும் பொறுப்புவாய்ந்தவர்கள் அதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வைத்தியசாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

 வைத்திய சாலை நிர்வாகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையானது யாழ்மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வைத்தியசாலையாகவும், வடமாகாணத்தில் மூன்றாவது பெரிய வைத்தியசாலையாகவும், புற்று நோய்சிகிச்சை, உள நல சிகிச்சை ஆகிய சிறப்புப் பிரிவுகளை உள்ளடக்கி ஊழியர்களின் அற்பணிப்பான சேவையினால் வடமாகாண மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகின்றது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களாகிய நாம் எமது வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடமும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திடமும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவை எவையும் இன்றுவரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

01. எமது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களுக்குத் தேவையான அளவு முகக்கவசங்கள் (N95), முகப்பாதுகாப்புக் கவசம் (Face Shield), தனிப்பட்ட பாதுகாப்பு அங்கி (PPE) என்பன வழங்கப்படவில்லை.

வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, வைத்தியசாலை விடுதிகள் என்பவற்றில் பணிபுரியும் வைத்தியர்கள் பலவிதமான நோயாளர்களையும் கையாள்வதனால் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்கும் அபாயத்தில் உள்ளார்கள்.

02. எமது வெளி நோயாளர் பிரிவில் போதுமான அளவு இடவசதி இன்மையால் சன நெருக்கடி ஏற்படுகிறது. நோயாளரை பார்வையிடும் பகுதி மற்றும் நோயாளரை அனுமதிக்கும் பகுதி (Admission Room) என்பவற்றை தனித்தனியாக பிரித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

03. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே எமது வைத்தியசாலையில் ஒரு அதிதீவிர சிகிச்சைப்பிரிவு ( ICU) மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு ( HDU ) என்பவற்றை ஆரம்பிக்க வேண்டிய உடனடித் தேவை உள்ளது.

இதற்கு நிரந்தரமான உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் (Consultant  Anaesthetist) ஒருவர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கென நியமிக்கப்பட்ட உணர்வழியியல் சிகிச்சை நிபுணருக்கு பதிலாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டிந்தும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குரிய உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் விடுவிக்கப்படவில்லை.

04. வவுனியா கல்வி வலய பணிமனையில் ஏற்பட்ட நிதி முறைகேட்டை காரணம் காட்டி எமது வைத்தியசாலை வைத்தியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதில் தேவையற்ற விதத்தில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இச் செயற்பாடானது யாழ்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளரினதும், வடமாகாண நிதி செயலாளரினதும் நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்ட பின்னடைவே காரணமாகும்.

05. எமது வைத்தியசாலையில் பணிபுரியும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்குச் சரியான விடுதி வசதிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் வைத்தியசாலை நிர்வாகத்தினாலும், பிராந்திய சுகாதார பணிமனை நிர்வாகத்தினாலும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால் சில வைத்தியர்கள் தங்கள் வேலையை இராஜினாமா செய்தும் சென்றுள்ளார்கள்.

06. வடமாகாணத்தில் உள்ள கொரோனா வைத்தியசாலைகள் உட்பட யாழ்மாவட்ட வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகள் மற்றும் புற்றுநோய் மருந்துக் கழிவுகள் அனைத்தும் தெல்லிப்பளை வைத்தியசாலையிலேயே எரியூட்டப்படுகின்றன. ஆனால் இங்கு எரியூட்டும் இயந்திரம் சரியான முறையில் இயங்காதபடியால் மருத்துவக் கழிவுகள் குறைதகனம் அடைந்து அதன்மூலம் தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர்கள், ஊழியர்கள் மற்றும் அருகாமையில் வசிப்பவர்கள் அனைவரும் மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேட்டுக்கு முகங்கொடுக்கின்றனர்.

அத்துடன் வைத்தியசாலைக் கழிவுக்கிடங்கிலிருந்து உரியமுறையில் கழிவுகள் அகற்றப்படாமையினால் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வைத்தியசாலையிலும் வைத்தியசாலையை சூழ்ந்த பகுதியிலும் வெள்ளத்தினூடாகப் பரவி சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளை சரியான காலத்தில் சரியான முறையில் தீர்ப்பதற்கு நிர்வாகத்தினரும் சம்பந்தப்பட்டவர்களும் ஒத்துழைப்புத் தராத பட்சத்தில் நாம் எமது கோரிக்கைகளை வலியுறுத்தி 08.12.2020 அன்று அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.