தமிழகம் முழுவதும் பரவலாக மழை

காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதேபோல, சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, பரமக்குடி, மயிலாடுதுறையில் மிதமான மழை பதிவாகியுள்ளது. கடலூரில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக அதி தீவிர கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிக்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால், சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்  நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 2 அணைகள் 114 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர் மழை காரணமாக பாலாறு, பொன்னை ஆற்றில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன.