தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானவை: ஐ.நா

தெற்கு சூடானில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக உள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது இந்த நாடு.

தெற்கு சூடான் கலவரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இங்கு தின்கா, நூயெர் ஆகிய இரு இனத்தவர்களுக்குள் பகைமை உணர்வு மேலோங்கி உள்ளது. இதனால் தேசமே இன அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. மேலும் இராணுவம் கூட இந்த இனங்களின் அடிப்படையில் பிளவுபட்டு உள்ளது.

அத்தோடு எங்கு பார்த்தாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள். நியாயமான காரணங்கள், நியாயமற்ற காரணங்கள் ஆகிய இரண்டுக்காகவும் புரட்சி வெடித்துக் கொண்டிருக்கின்றன. பல உள்ளூர்வாசிகள் இந்தப் புரட்சி இயக்கங்களில் சேர்ந்து கொள்கிறார்கள்.

தெற்கு சூடானில் விவசாயிகள், போராளிகள் ஆகிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. போராளிகள் ஆகாத விவசாயிகளும், கலவரங்கள் காரணமாக விவசாயம் செய்ய முன்வருவதில்லை. இதனால் உணவுப் பஞ்சம் நிலவுகிறது.

போராட்டக் குழுக்கள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. எனவே, போராளிகள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்கள்.  இதனால் அப்பாவி மக்கள் உணவின்றி வாடுகிறார்கள்.

இந்நிலையில், இதுகுறித்து  ஐக்கிய நாடுகள் சபை  வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் ஐந்தாண்டு உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் ஏற்படும் வன்முறைகளைவிட மோசமானதாக உள்ளது.

சூடான் அரசின் மூத்த அதிகாரிகள் தீவிரவாதக் குழுக்களை ஆதரிக்கின்றனர். சூடானில் மனித உரிமை மீறல்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பலரது இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  2018ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரிலிருந்து  சூடான் மீண்டுவராமல் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.