கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்து மீண்டும் அறிமுகம்

கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் கிட்டை’ பாபா ராம்தேவ் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

“‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு ‘கொரோனில்’ என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.

இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது.

இந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு ‘கொரோனில் கிட்’ என்ற பெயரில் அறிவியல் ஆதாரங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனில் கிட்டில் 2 வகை மாத்திரைகள் மற்றும் மூக்கு சொட்டு மருந்துகள் உள்ளன. இந்த மருந்துக்கு இந்த முறை உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்றி மத்திய ஆயுஷ் அமைச்சகமும் அங்கீகாரம் அளித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இதன் மருந்து அறிமுக விழாவில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பாபா ராம்தேவ் பேசும்போது, “இந்த இயற்கை மருந்து 3 முதல் 7 நாட்களுக்குள் கொரோனா தொற்று உள்ளவர்களை 100 சதவீதம் குணப்படுத்தும். இது நம் நாட்டின் ஆதாரப்பூர்வமான முதல் மருந்து” என்றார்.