தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்கின்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்திற்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார்   கருத்து தெரிவிக்கையில்,

“எங்களுடைய போராட்டம் இன்றைக்கு 1568 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.

தற்போதைய கொரோனா பெரும் தொற்று காரணமாக  பயணத் தடை நடைமுறையில் உள்ளதால் போராட்டப் பந்தலில் தற்போது தாய்மார்கள் இல்லை. ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியின் வீட்டில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்தும் போராட்டத்தில் உறுதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் எதனையும் வாங்குவதற்கு தயாராக இல்லை.  மேலும் அவர்கள் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடமே தமக்கான உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.

மேலும் வெளி நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதுடன் தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதற்கான ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்பதனையும் நான்கு அம்சக் கோரிக்கைகளாக  முன்வைத்து ஐ.நா விற்கும், சக்தி வாய்ந்த உலக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற ஏழு நாடுகளுக்கு எங்களுடைய கடிதத்தை அனுப்பி இருந்தோம்” என்றார்.